வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள 20சதொச விற்பனை நிலையங்கள்!

0
579

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வத்தகதுறை அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடபகுதியில் உணவு பற்றாக்குறை மற்றும் உணவுத் தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக 20 சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளோம்.

அவ்வாறு திறப்பதன் மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைத் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளமுடியும். அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உணவு களஞ்சிய சாலைகளில் அத்தியாவசிய பொருட்களைச் சேமித்து வைத்து சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்கள் இலகுவாக தமது அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அபாயகரமான ஒருபொருளாதார நிலையே தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. கோவிட் நோய் காரணமாகப் பல வல்லரசு நாடுகளிலும் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எமது நாட்டிலும் இந்த கோவிட் சூழ்நிலையின் காரணமாகவே பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் தற்போது பொருளாதார சூழ்நிலை மோசமாக காணப்படுகின்றது. பல தொழில் வாய்ப்புக்களை இழந்து உள்ள நிலை காணப்படுகின்றது. உற்பத்திகள் தடைப்பட்ட நிலையும் காணப்படுகின்றது.

சகல துறைகளிலும் இந்த கோவிட் நோயானது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் யுத்தத்தின் காரணமாக எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலையும் அதிகரித்து நிலை காணப்படுகின்றது.

எனினும் தற்போது நாட்டின் ஜனாதிபதியின் இயற்கை விவசாய முறையை மக்கள் பயன்படுத்த தொடங்கியதன் காரணமாக விவசாய உற்பத்தியில் பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்து நாடுகளில் பொருளாதார தாக்கமானது அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. அத்தோடு எமது உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நமது நாட்டில் உணவுத் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் வர்த்தகதுறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஒரு ஏற்றுமதியினை செயற்படுத்துவதற்கான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு அதனைச் செயல்படுத்தத் தயாராக உள்ளோம்.

அதன் ஒரு அங்கமாக பனங்கள்ளு உற்பத்தி கிராமம், பனங்கட்டி உற்பத்தி கிராமம், கடலட்டை உற்பத்தி கிராமம் போன்றவற்றை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் ஏதாவது எமது அமைச்சுக்குக் கிடைக்கப்பட்டால் நாங்கள் அதற்கு ஆதரவளிக்கத் தயார்.

தற்போது நமது நாட்டிற்கு ஏற்றுமதி கட்டாயம் தேவையானது. குறிப்பாக நுவரெலியாவில் கோப்பி தேயிலை போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வடக்கிலிருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது.எனவே வடக்கிலிருந்து பனங்கள்ளைத் தயார் செய்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.