“ஜனாதிபதியால் டொலரை அச்சிட முடியாது” – எஸ்.எம். சந்திரசேன

0
426

இலங்கைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் ஓரளவு தொகை அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் எனவும் அதுவரை மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக பொறுமை காக்க நேரிடும் எனவும் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சந்திரசேன இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி இங்கு டொலர்களை அச்சிட முடியுமா?. வருட இறுதியில் எமக்கு டொலர்கள் கிடைக்கும். டொலர் கிடைத்ததும் நாங்கள் எரிபொருள் விலைகளை குறைப்போம். சமையல் எரிவாயு வரிசைகளில் நிற்க வைக்க மாட்டோம்.

அதேபோல் மின்சாரத்தையும் துண்டிக்க மாட்டோம். அதுவரை பொறுத்திருங்கள். தனக்கு எரிபொருளை வழங்கக் கூடிய மூன்று நாடுகள் இருப்பதாக சஜித் பிரேமதாச கூறுகிறார்.

அப்படியானால், அதனை கொண்டு வாருங்களேன். அவர் எதிர்க்கட்சித் தலைவர். முடிந்தால், எதிர்க்கட்சித் தலைவருக்கும் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும்.

இரண்டு வருடங்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை. நாங்கள் நாட்டை கட்டியெழுப்புவோம் என கூறினோம். இரண்டு வருடங்களில் அல்ல ஐந்து வருடங்களில் அதனை செய்வதாகவே கூறினோம் எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.