சவுதி அரேபியாவில் 100வது மரண தண்டனை: உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க சவுதி அரேபியா நிர்வாகம் மறுப்பு!

0
301

சவுதி அரேபியாவில் வியாழக்கிழமை நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 100 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரத்தில், ஒரே நாளில் 81 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றி மனித உரிமை ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளதை அடுத்து, தற்போது மேலும் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தொட்டுள்ளது.

தீவிரவாதம் தொடர்புடையவர்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் மீது தாக்குதல் முன்னெடுத்தவர்கள், மத ரீதியான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 81 பேர்களுக்கு கடந்த வாரம் ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வழக்குகளில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது சந்தேகமே என குறிப்பிட்டுள்ளது மனித உரிமைகள் அமைப்பு. கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 41 பேர்கள் ஷியா முஸ்லிம் சிறுபான்மையினர் எனவும், சவுதி அரசாங்கத்தால் தொடர்ந்து பாகுபாடு மற்றும் வன்முறையை அனுபவித்தது வந்துள்ளவர்கள் என நியூயார்க் நகரை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், ஏமன் மற்றும் சிரியா நாட்டவர்கள் 8 பேர்களும் தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கி மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். இதனிடையே, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க சவுதி அரேபியா நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும்,குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை முன்னெடுப்பதால், குறிப்பிட்ட பகுதிகளில் கலவரத்திற்கான சாத்தியம் இருப்பதாக அஞ்சுவதாகவும் சவுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.