பிரான்ஸ் அரசின் திட்டம் ; ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத்தயார்

0
49

பிரான்சில் சொத்து வைத்திருப்பவர்கள், தங்கள் கட்டிடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு பாய்லர்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளும் நிலையில், அவர்களுக்கு 9,000 யூரோக்கள் வரை நிதியுதவி வழங்க அரசு முன்வந்துள்ளது.

MaPrimeRenov என்று அழைக்கப்படும் திட்டத்தின் கீழ், பிரான்சில் வீடு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், அவர்கள் வரி எண், வரி செலுத்தியதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும். அத்துடன், நீங்கள் வீடு அல்லது சொத்து வாங்கி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆகியிருந்தால்தான் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஒரு வீட்டில் வசிப்பவர்களின் குடும்ப வருவாய், எத்தனை பேர் அந்த வீட்டில் வசிக்கிறார்கள், அந்த சொத்து அல்லது வீடு எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொருத்து எவ்வளவு நிதியுதவி வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்படும்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

ஒன்று, எண்ணெய் மற்றும் எரிவாயு பாய்லர்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளும் நிலையில், அதனால், பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவது குறையும்.

இரண்டு, எரிவாயுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை இதனால் குறைக்க முடியும். அதுவும், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியுள்ள நிலையில், பல நாடுகள் எரிவாயுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதற்கு மாற்று வழி தேடிவரும் நிலையில், பிரான்ஸ் இந்த நிதியுதவித் திட்டம் மூலம் அதையும் சாத்தியப்படுத்திக்கொள்ள முயல்கிறது.

2027ஆம் ஆண்டு வாக்கில், ஆற்றலுக்காக, அதாவது எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற விடயங்களுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வர இலக்கு நியமித்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.