கோட்டாபய ராஜபக்சவிடம் இப்படியான ஆட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை-சீற்றத்தில் ஞானசார தேரர்!

0
256

நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் இப்படியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதியிடம் இப்படியான ஆட்சி நிர்வாகத்தை எதிர்பார்த்து இருக்கவில்லை எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். “ரயில்வே, மருத்துவமனைகளில் பணிப்புறக்கணிப்புகளை செய்ய இடமளிக்க முடியாது.

இவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காகவே மக்கள் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் வழங்கினர். இங்கு ஆர்ப்பாட்டம், அங்கு எதிர்ப்பு நடவடிக்கை என்ன இது.

கோட்டாபய ராஜபக்சவிடம் இப்படியான ஆட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி கொள்கின்றனர்.

அத்தியவசியமான பயணங்களை மேற்கொள்ளும் போது வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது.

அந்த பலத்தை பயன்படுத்தாமல் இருப்பதால், என்ன பிரயோசனம். மக்கள் பிக்குகளையும் திட்டுகின்றனர். இரசாயன பசளை எதிர்பார்த்து இருந்தோம் என்றால், எரிபொருள், எரிவாயு போன்று இரசாயன பசளை கப்பலில் வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும்.

முன் கூட்டியே நாம் சேதனப் பசளை பயிர் செய்கைக்கு சென்றுள்ளோம். குறைப்பாடுகளுடன் கூட அதனை செய்ய முடிந்தால், நல்லது. மக்கள் மத்தியில் சென்று சரியாக புரியவைக்க கூடிய எவரும் இல்லை. நாடு எந்த நிலைமையில் இருக்கின்றது என்பதை சரியாக கூறுங்கள்” எனவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.