சிறுமிக்குக் கட்டாய திருமணம்; மூவர் கைது

0
340

அரியலூர் அருகே சிறுமியைக் கட்டாய திருமணம் செய்த வழக்கில் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான சரவணகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். தான் படிக்க வேண்டும் என சிறுமி கூறியதையும் மீறி தான் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியதையடுத்து தாயார் மற்றும் சிறுமியின் சித்தி, சிறுமியைத் திட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதியன்று சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்ற சரவணகுமார் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சரவணகுமாரின் தாயார் சூரியகலா சிறுமியின் தாயார் ஜோதிமணியிடம் பேசி இருவருக்கும் திருமணம் முடிவு செய்தனர். திருமணம் நடைபெற்ற சில மாதங்களிலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சரவணகுமாரின் தாயார் சூரியகலா, சிறுமியை மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டுத் தனது மகனுக்கு வேறொரு திருமணம் செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமிக்குக் குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சரவணகுமாரின் தாயார் சூரியகலா, அக்கா மீனா, அவரின் மாமா மோகனராஜ் மற்றும் சிறுமியின் தாயார் ஜோதிமணி, சித்தி சித்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரின் தாயார் சூரியகலா மற்றும் சிறுமியின் தாயார் ஜோதிமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.