கனடாவில் சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்களில் ஒருவர் குறித்து வெளியாகியுள்ள துயர தகவல்

0
398

கனடாவில் சாலை விபத்தொன்றில் இந்திய இளைஞர்கள் ஐந்து பேர் பலியானார்கள்.

அவர்களில், பவன் குமார் (23) என்பரும் ஒருவர். பவன் குமார் ஹரியானாவிலுள்ள Lilas என்னும் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அந்த கிராமத்தின் மொத்த மக்கள்தொகையே 2,600தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பவன் குமார் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

அந்த கிராமத்திலிருந்து வெளிநாட்டுக்கு கல்விகற்பதற்காக சென்ற முதல் நபர் பவன் குமார்தான். கல்வி கற்று தன் கிராமத்துக்கு பெருமை சேர்க்க இருந்த பவன் குமாரின் கனவு நனவாகாமலே போய்விட்டது.

சனிக்கிழமையன்று நெடுஞ்சாலை 401இல், அதிகாலை 3.45 மணிக்கு வேன் ஒன்றில் எட்டு பேர் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்த வேன் மீது ட்ராக்டர் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில், ஐந்து பேர் பலியாக இரண்டு பேர் படுகாயமடைந்தார்கள்.

பலியானவர்களில் பவன் குமாரும் ஒருவர்.

இதற்கிடையில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்த வேன் திடீரென நடுவழியில் நின்றதாகவும், அதிலிருந்து ஒருவர் இறங்கியதாகவும், Const. Maggie Pickett என்ற பொலிசார் தெரிவித்துள்ளார். அந்த வேன் எதற்காக நடுவழியில் நின்றது என்று தனக்குத் தெரியவில்லை என்கிறார் அவர்.

அந்த வேனின் சாரதிக்கும், வேனிலிருந்து இறங்கியவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட பவன் குமார், கனடாவில் நல்ல நிலைமைக்கு வந்து தங்களுக்கு உதவுவார் என அவரது குடும்பத்தினர் காத்திருந்தார்களாம்.

அந்த கிராமத்திலிருந்து பவன் குமார் கல்வி கற்பதற்காக கனடா சென்றபோது, கிராமமே மகிழ்ச்சி அடைந்ததாம். இதற்கு முன் யாரும் அந்த கிராமத்திலிருந்து வெளிநாடு சென்றதில்லை என்பதால் பவன் குமாரைக் குறித்து கிராமமே பெருமையடைந்ததாம்.

ஆனால், தற்போது, சோகமே உருவாக, கனடாவிலிருந்து பவன் குமாரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாம் அவரது குடும்பம்.