விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த ரிஹானா மற்றும் துன்பெர்க்

0
1317

அமெரிக்காவைச் சேர்ந்த பாப் சூப்பர் ஸ்டார் ரிஹானா இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டுவிட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரைப் போலவே உலகப் புகழ் பெற்ற இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கும், தனது ஆதரவைப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர்.

இறுதியாக அவர்கள் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் திகதி, டிராக்டர் வண்டிகளில் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்குக் கடந்த சில நாட்களாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல போராட்டக் களத்திற்கு மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதியையும் துண்டித்துள்ளது அரசுத் தரப்பு.

இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ரிஹானா தனது டுவிட்டரில், ‘இது குறித்து நாம் ஏன் பேசுவதில்லை?’ என்று கேட்டு பதிவிட்டுள்ளார்.

அவரைப் போலவே கிரெட்டாவும், ‘நாங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம்’ என்று தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இவர்களது இந்த பதிவுகள் சர்வதேச அளவில் பேசு பொருளாகி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.