மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா.கண்டனம்

0
461

மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள் அறிக்கையில்,”ஆங் சான் சூச்சி, ஜனாதிபதி யு வின் மைன்ட் மற்றும் பிற அரசியல் தலைவர்களைத் தடுத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் மியான்மரின் ஜனநாயக சீர்திருத்தங்கள் அடிபட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மியான்மர் அரசை திங்கட்கிழமையன்று அந்நாட்டு ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைநகரிலிருந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர நிலையையும் ராணுவம் அங்கு அமல்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மியான்மர் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், சட்டத்தை மதித்து நடக்கும்படியும் தெரிவித்துள்ளன.