துவாஸ் சோதனைச்சாவடியில் தாமதம்; ஆயிரக்கணக்கான கோழிகள் மாண்டன

0
218

துவாஸ் சோதனைச் சாவடியில் சரக்கு வாகனங்கள் கடந்த வாரம் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான கோழிகள் மாண்டுபோயின. படம்: சாவ் பாவ் வாசகர்

துவாஸ் சோதனைச் சாவடியில் சரக்கு வாகனங்கள் கடந்த வாரம் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான கோழிகள் மாண்டுபோயின.

போக்குவரத்தின்போது சிறிய இடத்துக்குள் அவை அடைக்கப்பட்டிருந்ததாலும் அங்கு காற்றோட்டமின்றி வெப்பம் அதிகமாக இருந்ததாலும் அவை இறந்திருக்கக்கூடும் என கோழிகளை இறக்குமதி செய்தவர்கள் ‘தி சண்டே டைம்சிடம்’ குறிப்பிட்டனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் தாமதங்களை எதிர்கொண்டாலும் ஜனவரி 27, 28 தேதிகளில் நெரிசல் மிகவும் அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

ஜோகூரிலிருந்து தினமும் சுமார் 5 டிரக் கோழிகள் சிங்கப்பூருக்கு வரும் என்று பூங் பவுல்ட்ரி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஓ வெய் சியட் கூறினார்.

ஒவ்வொரு டிரக்கிலும் சுமார் 10 விழுக்காடு கோழிகள் இறந்துபோனதாக அவர் தெரிவித்தார்.

அவை வண்டிகளில் ஏற்றப்பட்டதிலிருந்து சுமார் 3 மணி நேரப் பயணத்துக்குப் பிறகே சோதனைச் சாவடிக்கு வந்து சேரும். அங்கு கூட்ட நெரிசலால் மேலும் 12 மணி நேரத்துக்கு அடைபட்டுக் கிடப்பதுடன் அவற்றுக்கு உணவோ நீரோ அங்கு வழங்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக வாகனங்களில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கோழிகளைக் கொண்டு செல்வதற்கு முன்பு அவற்றுக்கு உணவு வழங்கப்படாதாம்.

ஜனவரி 27, 28 தேதிகளில் சுமார் 11 மணி நேரத் தாமதம் ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 2,000 கோழிகள் இறந்துபோனதாக டோ தய் சேன் கோழிப் பண்ணையின் இயக்குநர் ஜான்சன் டோ தெரிவித்தார்.

ஆயினும் வெள்ளிக்கிழமையிலிருந்து நிலவரம் மேம்பட்டுள்ளது.

சிலர் கோழிகளை மாறுபட்ட நேரங்களில் வாகனங்களில் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளன.

சரக்கு வாகனங்கள் சிங்கப்பூருக்குள் நுழையத் தாமதமாவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அடுத்த வாரமும் நிலவரம் கண்காணிக்கப்பட்டு பின்னர் மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

கோழிகள் இறப்பு