அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு

0
413

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கலச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை சுமார் 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த சிலையை, நகராட்சி நிர்வாகம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தி எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அங்கு வைத்தது. இந்த சிலையை விஷமிகள் தாக்கி, அதன் கணுக்கால் பகுதி வெட்டப்பட்டு, சிலையின் முகத்தில் பாதி துண்டிக்கப்பட்டு காணாமல் போய் உள்ளது.

இதை கடந்த 27-ம் தேதி பூங்காவின் ஊழியர்தான் முதலில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை அகற்றி, பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும் என்று டேவிஸ் நகராட்சி கவுன்சிலர் தெரிவித்தார்.

இதுகுறித்து டேவிஸ் நகர போலீஸ் துணைத்தலைவர் பால் டோரோஷோவ் கூறுகையில், டேவிசில் உள்ள ஒரு பகுதியினருக்கு இந்த சிலை கலாசார சின்னமாக இருந்து வந்தது. எனவே இதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மட்டுமல்லாது, உலகமெங்கும் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் ஆழ்ந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.