வுஹானுக்கு இன்று செல்லும் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் குழு

0
941

கொரோனாவின் தோற்றம் குறித்து ஆய்வினை மேற்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையிலான வல்லுநர்கள் குழுவொன்று மத்திய சீன நகரமான வுஹானுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத பிற்பகுதியில் வுஹானில் அமைந்துள்ள விலங்குணவு சந்தையொன்றில் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றதாக கூறப்படும் நிலையிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது.

எனினும் சில சீன இராஜதந்திரிகளும் சீன அரச ஊடகங்களும் கொரோனா வைரஸ் வுஹானில் தோன்றவில்லை. அது பிரிதொரு நாட்டில் தோன்றியதாக கூறி வருகின்றனர்.

எவ்வாறெனினும் கடந்த 2019 டிசம்பர் 31 ஆம் திகதி குறித்த சந்தையில் ஒரு மர்ம நிமோனியாவின் தாக்கத்துக்குள்ளாகி நால்வர் பாதிப்படைந்தனர். அதன் பின்னரான காலக் கட்டத்தில் சந்தையும் பூட்டப்பட்டதுடன், வுஹானும் 76 நாட்கள் முடக்கல் நிலைக்கு சென்றது.

இந் நிலையில் தற்போதைய உலக சுகாதார ஸ்தபன வல்லுநர்களின் குழு சீனாவுக்கு விஜயம் செய்து, வுஹான் சந்தை மற்றும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆகியவற்றை பார்வையிட திட்டமிட்டுள்ளது.

இந்த குழு ஜனவரி மாதத்தில் வுஹானுக்கு வரவிருந்தது. எனினும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தாமதங்கள், அணுகல் மற்றும் சச்சரவு ஆகியவற்றால் வருகை தாமதமானது.