ரோமேனியாவில் கொவிட்-19 மருத்துவமனையில் தீ விபத்து

0
431

ரோமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள கொவிட்-19 மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (29.1.2021) அதிகாலை மேட்டி பால்ஸ் மருத்துவமனையின் கட்டடங்களில் ஒன்றில் சுமார் 0300 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தின் போது 102பேர் பாதுகாப்பாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது நான்கு அறைகள் பாதிக்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை கட்டடம் 1953ஆம் ஆண்டில் கட்டப்பட்டது மற்றும் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது என அதன் மேலாளர் கூறினார்.

வெளியேற்றப்பட்ட நோயாளிகளுக்கு நடுத்தர முதல் தீவிரமான கொவிட்-19 நோய்த்தொற்றுகள் இருந்ததாகவும் பெரும்பாலானோர் செயற்கை சுவாசக் கருவின் உதவியுடனேயே இருந்ததாகவும் மேலாளர் கூறினார். அவர்களில் சுமார் 44 பேர் புக்கரெஸ்ட் முழுவதும் உள்ள மற்ற கொவிட்-19 மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மீதமுள்ள நோயாளிகள் மேட்டி பால்ஸில் உள்ள மற்ற கட்டடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய மாநிலத்தில் மூன்று மாதங்களுக்குள் ஏற்பட்ட இரண்டாவது ஆபத்தான மருத்துவமனை தீ விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.