இலங்கையில் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைப்பு…!

0
375

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பினை அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.

நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியலமைப்பு திருத்தம் குறித்து நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் சில யோசனைகளை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி பிரஜை ஒருவரின் வாக்களிக்கும் உரிமை நேரடியாக அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பொதுசன வாக்கெடுப்பு மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பினையும் அதில் உள்ளீர்க்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.

அத்துடன் போட்டியிடும் வேட்பாளர், அவரினால் மேற்கொள்ளப்பட்ட செலவு மற்றும் வருமானம் அடங்கிய கோப்பினை தேர்தல் பெறுபேறுகள் வெளியாகி 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட வேண்டும் என்ற மேலும் ஒரு யோசனையும் அவற்றில் அடங்கியுள்ளது.

பொதுசன வாக்கெடுப்பில் தற்போது ஒரு வியடத்திற்காக மாத்திரமே மக்கள் கருத்து கணிப்பு இடம்பெறுகிறது.

இதன்படி ஏதேனும் ஒரு சட்டத்தை சில செயற்பாடுகள் தொடர்பான விடயதானம் அல்லது பல விடயதானங்களுக்காக மக்கள் கருத்து கணிப்பு கேட்கக்கூடிய வகையில் சரத்தினை திருத்தும் செய்ய வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை செய்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் தவறுகள், தேசிய பட்டியல் நாடாளுமன்ற பதவி, மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்த சில யோசனைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியலமைப்பு திருத்த குழுவிடம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளது.