ஷியாமளா கோபாலன்: கமலா ஹாரிஸின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எவ்வாறு?

0
50

துணை அதிபர் கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன், அமெரிக்காவில் ஒரு விஞ்ஞானி, ஒரு ஆர்வலர் என பன்முகத் திறமைகள் கொண்ட பெண்மணியாக இருந்தவர். மகளின் வாழ்வில் “மிகப் பெரிய தாக்கத்தை” ஏற்படுத்தியவராகவும் அவர் இருந்தார். அவருடைய வாழ்க்கை குறித்து டெல்லியில் இருந்து கீதா பாண்டே, வாஷிங்டன் டி.சி.யில் இருந்து வினீத் காரே ஆகியோர் விவரிக்கின்றனர்.

துணை அதிபராக பதவி ஏற்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, அமெரிக்க அரசில் இரண்டாவது உயரிய பதவியை தாம் அடைவதற்கான பயணத்திற்கு வழிகாட்டியாக இருந்த பெண்மணிக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் மரியாதை செலுத்தினார்.

ட்விட்டரில் அவர் பதிவேற்றிய வீடியோவில், “இன்றைக்கு நான் இந்த நிலைமைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணமான பெண்மணி, என் தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ்” என்று குறிப்பிட்டிருந்தார்.

“அமெரிக்காவில் இதுபோன்ற தருணங்கள் சாத்தியம் தான் என்று அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.” திருமதி ஹாரிஸ் அமெரிக்காவில் வரலாறு படைத்துள்ளார். கருப்பினத்தைச் சேர்ந்த மற்றும் தெற்காசிய அமெரிக்கரில் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற முதலாவது பெண்மணி என்ற வகையில் அவர் சரித்திரம் படைத்தார்.

ஆனால், தனது பெரும் கனவுகளுடன் 1958-ல் இந்தியாவில் இருந்து பயம் ஏதுமின்றி அமெரிக்காவுக்கு சென்ற அவருடைய தாயாரின் பயணத்தை அறியாமல், கமலா ஹாரிஸ் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துவிட முடியாது.

மக்கள் நிர்வாகத் துறை பணியில் உள்ள அப்பா, இல்லத்தரசியான தாயாரின் நான்கு பிள்ளைகளில் மூத்தவரான திருமதி கோபாலன், உயிரி வேதியல் (பயோகெமிஸ்ட்ரி) படிக்க விரும்பினார்.

ஆனால் டெல்லியில் லேடி இர்வின் கல்லூரியில், ஹார்டு சயின்ஸ் எனப்படும் கடினமான துறைகளில் பெண்களுக்கு இடம் தருவதில்லை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்தில் அந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. எனவே அவர் மனை அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டம் சேர வேண்டியதாயிற்று. அ

தில் சத்துணவு மற்றும் இல்ல மேலாண்மை திறன்கள் கற்பிக்கப்பட்டன.

“நானும் என் தந்தையும் அவரை சீண்டி விளையாடுவோம்” என்று அவரது சகோதரர் கோபாலன் பாலச்சந்திரன் பிபிசியிடம் கூறினார்.

“அவரிடம் இன்று உனக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்கள்? டேபிளை எப்படி விரிப்பது என்றா? ஸ்பூனை எங்கே வைக்க வேண்டும் என்றா?’ என்று கேட்போம். அவர் எங்கள் மீது கோபப்படுவார்” என்று சொல்லி சிரிக்கிறார் அவர்.