மன அழுத்தம் தவிர்க்க ஆலோசனைகள்

0
589

வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள்; சுற்றத்தை விட்டு விலகுவார்கள்; நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள்; வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

நிதி நெருக்கடி, தனிப்பட்ட இழப்புகள், உறவுகளின் பிரிவுகள், நீண்ட நாள் நோய், தாங்க முடியாத வலி, போதைப் பொருட்களின் பயன்பாடு, கடந்த கால அதிர்ச்சிகள், அவமானங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதை மருத்துவ உலகம் இன்று ஏற்றுக்கொண்டு உள்ளது.

* வாழ்க்கையில் பிரச்னைகளே வரக் கூடாது என்று எண்ணாதீர்கள். அது வரத்தான் செய்யும். பிரச்னையில்லாமல் வாழ்க்கை இல்லை. ஆகவே, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள்.

* உங்களுக்கு ஒரு பிரச்னை வந்தால், அது உங்களுக்கானது மட்டும் அல்ல. அது உங்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை உணருங்கள். அதனால், உங்களுடைய  துயரங்கள் அனைத்தையும் நெருக்கமான நண்பர்களிடம் மனம் விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.

வேலைநிமித்தமான அழுத்தம் என்பது இருக்கவேசெய்யும். ஆனால், அலுவலகத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், நம்முடைய பிரச்னைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். வீட்டுக்கு வந்தும், அலுவலக வேலைகளைத் தொடரக் கூடாது. கூடுமானவரை இதைத் தவிர்க்கவேண்டும். வீடு என்பது வாழ்வதுக்குத்தான்!

தினசரி எட்டு மணி நேர உறக்கம் என்பது அவசியம். அப்போதுதான், அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளவும் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.

உணவுப்பழக்கம் முக்கியமான ஒன்று. ஒரேசமயத்தில் வயிறுமுட்ட சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானது.

* வாழ்க்கையில், நாம் நினைக்கிற மாதிரிதான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது சாத்தியமில்லை. எதிர்மறை குணங்கள் கொண்டவர்களிடம் பழக வேண்டிய சூழல் ஏற்படும். அவர்களைப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும் பழகவேண்டும்.

* உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில் எப்படியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றித் திட்டமிடலாம். நம்முடைய உணர்வுகள் பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

* தோல்விகள் என்பது பிரச்னையில்லை. ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்து, நீங்கள் எப்படி வெளியே வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதற்குரிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

வெற்றி, தோல்வி கண்டு கவலைப்படவே வேண்டாம். ஒரு செயலில் வெற்றி அல்லது தோல்வி இரண்டில் ஒன்று தான் நிச்சயம். ஆனால் செயலில் இறங்காமலே பயத்தில் இருப்பது முட்டாள்தனம்.

மனஅழுத்தம் போக்க 7 சிறந்த வழிகள்

யோகாசனம் 

தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் பொழுது மனமானது சாந்தமாகி பின்னர் அமைதி அடையும்.

புத்தகம் படிப்பது

புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியோடு இருக்கும்.

இசையை கேட்பது

கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது. நல்ல இசையை கேட்டு மகிழ்வதே. இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.

தோட்டக்கலை

தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றடாம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும்.

சமைப்பது

சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொணடிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம், என்பதிலும் தான் இருக்கும். மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.

எழுதுவது

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி எழுதுவது. அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம், அல்லது சிறு கதைகளாகவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவையை காகிதம் அல்லது கணினி மூலம் ஒரு படிவம் தருவதாக இருக்கும் இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும்.

விளையாட்டு

குழந்தைகளோடு குழந்தையாக விளையாடுங்கள். அந்த நேரத்தில் உங்களின் வயதை மறந்து விளையாடுங்கள்.

ஆன்மீகம்

கோயில்களுக்கு செல்லுங்கள். ஆன்மீக கதைகளை படியுங்கள். ஆன்மீக சொற்பொழிவுகளை கேளுங்கள். மனதை ஒரு நிலைப்படுத்துங்கள்.

அனைவரிடமும் அன்பு செலுத்த கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே…..