ஜெனீவா மனித உரிமை சபையிலிருந்து அனுப்பிய பரிந்துரைகளில் கூடுதலான பகுதிகளை நிராகரித்த கோட்டா அரசு!

0
373

ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலேற் அனுப்பிய பரிந்துரைகளில் கூடுதலான பகுதிகளை நிராகரிப்பதாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளது.

போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களுக்கு உட்பட முறையில் உள்ளக விசாரணைகளை நடத்த முடியுமென்றும் ராஜபக்ச அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு இன்று புதன்கிழமை இரவு அறிவித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் மனித உரிமைச் சபைக்கு அறிவிக்கப்பட்டமை தொடர்பாக இன்று நள்ளிரவு வரையும் இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை. ஆனாலும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்களின் பிரகாரம், ஆணையாளரின் பரிந்துரைகளில் பெரும்பகுதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலேற் அனுப்பிய பரிந்துரைகளுக்கான பதில் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இன்று முற்பகல் கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இறுதிப் போரில் இலங்கைப் படையினர் குற்றமிழைக்கவில்லை என்றும் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் தெரிவித்தார்.

ஆனாலும் குற்றம் இழைத்ததாகக் கூறப்படும் படையினரை விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார் என்றும் விரைவில் இந்தக் குழு விசாரணைகளை ஆரம்பிக்குமெனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை எனவும் பொறுப்புக்கூறவில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ளதாகவும் மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலேற் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள பரிந்துரைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பொறுப்புக் கூறத்தவறியதால் ஐசிசி எனப்படும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்துமாறும் உறுப்பு நாடுகளுக்கான பரிந்துரைகளில் மனித உரிமைச் சபையின் ஆணையாளர் கேட்டுள்ளார். இந்தப் பரிந்துரைகளின் பிரதியே கடந்த அண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமைச் சபையின் ஆணையாளர் கையளித்திருந்தார்.

இவ்வாறு இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்த பிரதியே கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் ஆங்கிலப் வாரப் பத்திரிகையில் கசிய விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.