சிங்கப்பூரில் பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 16 வயது மாணவன் கைது!

0
446

சிங்கப்பூரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களைத் தாக்கி, தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிய 16 வயது மாணவரை அந்த நாட்டு பொலசார் கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூரை சேர்ந்த அந்த மாணவர், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் தாக்குதல்கள் நடந்த இரண்டாவது ஆண்டு நிறைவான, வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி அந்தத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இந்திய பின்னணியுடைய புரட்டஸ்தாந்து கிறித்துவரான அந்த மாணவர், வலதுசாரி தீவிரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முதல் நபர் எனவும் பயங்கரவாதம் தொடர்பான செயல்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை தடுத்து வைக்கப்பட்டவர்களுள் ஆகக் குறைந்த வயதுடையவர் எனவும் சிங்கப்பூர் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

உயர்நிலைப் பாடசாலை மாணவரான அந்த இளையர், வெட்டுக்கத்தியைக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக இரண்டு பள்ளிவாசல்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த விரிவாகத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

செம்பவாங் அசையாஃபா பள்ளிவாசல், உட்லண்ட்சில் இருக்கும் யூசோஃப் இஷாக் பள்ளிவாசல் ஆகிய இரண்டையும் தாக்குதலுக்கு அவர் குறிவைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

கிறைஸ்ட்சர்ச்சில் தாக்குதல் நடத்திய பிரென்டன் டேரன்டால் ஈர்க்கப்பட்ட இந்த மாணவன், ‘ஃபிளேக்’ (flak) சட்டை ஒன்றை வாங்கினார். கேரசல் இணையத்தளத்தில் அரிவாள் ஒன்றை வாங்கத் திட்டமிட்டதுடன் அந்த பயங்கரவாதத் தாக்குதலை நேரடியாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பவும் திட்டமிட்டிருந்தார்.

“இஸ்லாமிய சமயத்தின் மீது கடும் வெறுப்புக் கொண்ட அந்த மாணவர், வன்முறையின் மீது மோகம் கொண்டு சுய தீவிரவாத சிந்தனையை வளர்த்துக் கொண்டார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நேரலையாகப் பார்த்த அவர், தாக்குதலை நடத்திய பிரென்டன் டேரன்டைப் பற்றி படித்து தெரிந்துகொண்டார்,” என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

மேலும், ஐஎஸ் அமைப்பின் பிரசாரக் காணொளிகளைப் பார்த்து, ஐஎஸ் அமைப்பு இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் கொல்ல இஸ்லாம் அழைப்புவிடுப்பதாகவும் அவர் தவறான முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இரண்டு பள்ளிவாசல்களையும் பற்றி இணையம் வழி செய்திகளைத் திரட்டிய மாணவன், இரு இடங்களுக்கும் இடையிலான பயணத்துக்கு வாகனத்தில் செல்லத் திட்டமிட்டார். அதற்காக ஒரு வாகனத்தைத் தயார் செய்யவும் அவர் திட்டமிட்டதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

இணையம் வழியாக வாங்கிய மேற்சட்டையில் வலதுசாரி தீவிரவாத குறியீடுகளை அமைத்து, அந்தச் சட்டையை தாக்குதலின்போது அணிந்துகொள்ளத் திட்டமிட்டார். அந்தச் சட்டையில் கைபேசியை வைப்பதற்கு ஏதுவாக ஒரு பகுதியையும் ஏற்படுத்தி, அதன் மூலம் தாக்குதலை நேரலையாக்கத் திட்டமிட்டுள்ளார்.

வெட்டுக்கத்தியைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தும் முடிவுக்கு வருவதற்கு முன்பு, அவர் பல்வேறு தெரிவுகளையும் ஆராய்ந்துள்ளார்.

முதலில் துப்பாக்கி ஒன்றை வாங்கத் திட்டமிட்ட அவர், சிங்கப்பூரின் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கருத்தில் கொண்டு, பின்னர் அதனைக் கைவிட்டார்.

தாக்குதலுக்கு வெடிகுண்டைப் பயன்படுத்துவது, பெட்ரோலைக் கொண்டு பள்ளிவாசல்களில் தீ மூட்டுவது போன்ற திட்டங்களையும் தீட்டி, பின்னர் அவற்றைத் தருவிப்பது, தனது சொந்த பாதுகாப்பு போன்ற காரணங்களால் அந்தத் திட்டத்தையும் கைவிட்டார்.

இறுதியில் வெட்டுக்கத்தியை ஆயுதமாகத் தேர்ந்தெடுத்த அவர், தாக்கப்படுபவர்களின் கழுத்து, மார்புப் பகுதிகளைக் குறிவைக்கத் திட்டமிட்டார்.

உள்நாட்டு பாதுகாப்புத் துறையால் அவர் கைது செய்யப்பட்டபோது அவர் வெட்டுக்கத்தியை வாங்கியிருக்கவில்லை.

இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாகவே கைது செய்யப்படலாம், அல்லது தாக்குதல் நடத்திய பிறகு போலிசாரால் சுட்டுக் கொல்லப்படலாம் என எதிர்பார்த்ததாக அந்த மாணவன் விசாரணையின்போது தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதுவரை மேற்கொண்ட விசாரணையில், அவர் தனித்து செயல்பட்டதாகவே தெரியவந்துள்ளது. அவர் மற்றவர்களை ஈர்க்கவோ அல்லது தன்னுடைய தாக்குதல் திட்டங்களில் மற்றவர்களை ஈடுபடுத்தவோ இல்லை.

அவரது குடும்ப உறுப்பினர்களோ அல்லது அவரது சமூகத் தொடர்புகளோ இந்தத் தாக்குதல் திட்டங்கள் பற்றியோ அல்லது இஸ்லாம் மீதான அவரது ஆழ்ந்த வெறுப்பு பற்றியோ அறிந்திருக்கவில்லை என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.