இலங்கையில் உருமாறிய புதிய வைரஸ்; கொவிட் தடுப்பு செயற்திட்டங்கள் மேலும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

0
313

ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறது என்பதை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இலங்கையில் கொவிட் தடுப்பு செயற்திட்டங்கள் மேலும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

உருமாறிய வைரஸ் பரவலின் தன்மை இலங்கையிலும் காணப்படுவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணியகம் தெரிவித்துள்ளதோடு அது குறித்த அறிக்கையும் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் சுகாதார அமைச்சு மக்களை தெளிவூட்ட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறது என்பதை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இலங்கையில் கொவிட் தடுப்பு செயற்திட்டங்கள் மேலும் விஸ்திரப்படுத்தப்பட வேண்டும். தனிமைப்படுத்தலிலுள்ள நபரொருவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் ஊடாகவே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் அங்கிருந்து சென்றவர்களிடமும் மாதிரிகளைப் பெற்று பரிசோதித்து துரிதமாக முடிவுகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் கால தாமதமாக அதள் முடிவுகள் கிடைக்குமானால் எதிர்வரும் காலங்களில் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். அத்தோடு புதிய வைரஸ் சமூகத்திற்குள் பரவக் கூடிய அபாயமும் ஏற்படும்.

கொழும்பிற்கும் அப்பால் காலி உள்ளிட்ட பகுதிகளில் முதியோர் இல்லத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொவிட் பரவலைப் பொறுத்தவரையில் முதியோர் மிக அவதானமாக இருக்க வேண்டியோராவர். எனவே இவ்வாறான முதியோர் இல்லங்களை தேர்ந்தெடுத்து பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுத்து அவர்களை பாதுகாப்பதற்கான நடவக்கையை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது சுகாதார தரப்பினரும் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் அதேவேளை , அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். எனவே சுகாதாரத்துறையில் பெருமளவானோர் சேவையை முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ளர். இந்த நிலைமை தொடருமாயின் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடையக் கூடும். எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு முறையான நடவக்கைளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.