இலங்கை வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், புலிகளை சாடியதாகவே தேசிய உளவுச் சேவை, இராணுவ புலனாய்வுப் பிரிவு ஆகியன அறிக்கை அளித்திருந்ததாக சி.ஐ.டி தெரிவிப்பு!

0
411

வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், புலிகளை சாடியதாகவே தேசிய உளவுச் சேவை, இராணுவ புலனாய்வுப் பிரிவு ஆகியன அறிக்கை அளித்திருந்ததாக சி.ஐ.டி. முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த கொலைகளின் பின்னணியில் சஹ்ரானினால் நெறிப்படுத்தப்பட்ட குழுவினரே இருந்தமை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னரே கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் முதன் முறையாக இன்றைய தினம் சாட்சியமளிக்கும் போதே, அவர் இதனை வெளிப்படுத்தினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவான 42 ஆம் சிகிச்சையறையிலிருந்து ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், சாட்சியங்களை நெறிப்படுத்திய அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்க, 2018 நவம்பர் மாதம் 30ம் திகதி வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விடயம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

குறித்த சம்பவம் தொடர்பில், சம்பவ தினமே விசாரணைகளை சி.ஐ.டி. பொறுப்பேற்றதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்கவின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்த திஸாநாயக்க, பொலிஸ் பரிசோதகர் உபாலி, சார்ஜன் மெண்டிஸ் உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் ஷானி அபேசேகர குறிப்பிட்டார்.

இதன்போது இந்த சம்பவத்தில் சந்தேகத்தில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மட்டக்களப்பு பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்ட பின்னர் வாழச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ததாகவும் ஷானி அபேசேகர கூறினார்.

இதன்போது, குறித்த சம்பவத்தின் 5 நாட்களின் பின்னர் சம்பவ இடத்துக்கு அருகே இருந்து ஒரு பாடசாலை பை, தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன வழங்கிய தகவலுக்கு அமைய மீட்கப்பட்டதாகவும், குறித்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரினுடையது என நம்பத்தக்க ஜெகட், காற்சட்டை என்பன இருந்ததாகவும் ஷானி அபேசேகர கூறினார்.

இந்நிலையிலேயே, ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர், சி.ஐ.டி.விசாரணையில் அந்த இரட்டை கொலை சஹ்ரானினால் நெறிப்படுத்தப்பட்ட அடிப்படைவாத குழு முன்னெடுத்த குற்றச்செயல் என்பது சாட்சிகளுடன் வெளிப்படுத்தப்பட்டதாக ஷானி அபேசேகர கூறினார்.

இதன்போது ஷானி அபேசேகர சார்பில் ஆணைக்குழுவில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஷானி அபேசேகரவுக்கு விசாரணைக் கோவையை படிக்க போதிய கால அவகாசம் வழங்காமல் அவரிடம் விசாரணைத் தகவல்கள் குறித்து சாட்சியம் பெறுவதை ஆட்சேபித்தார்.

இதன்போது ஷானி அபேசேகரவுக்கு நினைவில் உள்ளதை மட்டும் கூறுமாறும், அவசியம் ஏற்படின் விசாரணைக் கோவையை பார்த்து பதில் அளிக்கலாம் எனவும் ஆணைக் குழு அறிவித்தது.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் கூட, சர்வதேச சதி, அமைப்புக்கள் தொடர்பில் சில தகவல்கள் எமக்கு கிடைத்தன. எனினும் நான் சி.ஐ.டி.யிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட காலப்பகுதி வரையில் அவற்றை உறுதி செய்ய சாட்சிகள் இருக்கவில்லை.

தாக்குதல்களின் பின்னர் சர்வதேச விசாரணை அமைப்புக்கள், உளவுச் சேவைகளும் இங்கு வந்து விசாரணை நடாத்தின. அவர்களாலும் அவ்வாறானதொரு விடயத்தை உறுதி செய்ய முடியவில்லை.’ என குறிப்பிட்டார்.