டெல்லியில் விவசாய பேரணியில் வன்முறை

0
543

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் டில்லி நோக்கி படையெடுத்தனர். குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டில்லி போலீசார் அனுமதியளித்தனர்.

டெல்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்செயல்கள் நடக்க துவங்கி உள்ளன. டெல்லி -ஹரியானா எல்லைப்பகுதியான டிக்ரி பகுதியில் போலீசார் அமைத்த தடுப்புகளை தகர்த்தனர் . குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரில் கிட்டத்தட்ட 2 லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.

டில்லிக்கு நுழைய சஞ்சய்காந்தி போக்குவரத்து நகர் வழியாக வந்த விவசாயிகள் தடுப்புகளை அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை வீசி கலைத்தனர். மேலும் சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது. காயமுற்றவர்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. தற்போது டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.