அரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதும் என முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே!! சுமந்திரன்

0
353

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் மாத்திரம் கையொப்பம் இட்டால் போதுமானது என்று வவுனியாவில் வைத்து முன்மொழிந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே அந்த ஆவணத்தில் முதலில் கையொப்பமிட வேண்டும் என்று விக்னேஸ்வரனே பிரேரித்தார் என்றும், அதன்படியே கையொப்பங்களை இணைவழியில் பெற்றதாகவும், விக்னேஸ்வரனுக்கு அவரது அணியில் உள்ள பங்காளிக்கட்சிகள் வழங்கிய அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக ஏனைய கூட்டுக்களில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்தினை பெறுவதற்கு தான் தடையாக இருந்ததாக தன்மீது பழியைப் போட்டுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். 

வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகளுக்கு கையொப்பம் வழங்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படாமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதோடு விக்னேஸ்வரன் தமது பங்காளிக்கட்சித் தலைவர்களின் கையொப்பங்களையும் உள்ளீர்க்குமாறு கோரியபோதும் நீங்கள் அதனை செய்யவில்லை என்றும் தெரியவருகின்றதே என்று எழுப்பிய கேள்விகுப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், அதுபற்றி உறுப்பு நாடுகளிடத்தில் விடுக்கப்படவேண்டிய கோரிக்கைகள், இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்கான உபாயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகள் சிவில் அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்களின் நேரடிப்பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உள்ளடவர்களை ஒன்றிணைத்து பொதுவான விடயங்களை உள்ளடக்கிய ஆவணமொன்றை தயாரிக்கும் முனைப்பில் சிவகரன் தலைமையிலான தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. 

ஆவணம் இறுதியான தருணத்தில் மின்னஞ்சல் பரிமாற்றத்தில் யார் கையொப்பம் இடுவது என்ற கேள்வி மீண்டும் எழவும், கஜேந்திரகுமார், வவுனியா கூட்டத்தில் தீர்மானித்ததன் பிரகாரம் கையொப்பங்களை இடுமாறு மின்னஞ்சலில் குறிப்பிட்டார். அதனை நானும் ஆமோதித்தேன். அதன்போது சம்பந்தன் முதலாவதாக கையொப்பம் இடுவதை தான் விரும்புவதாக மட்டுமே விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். 

அன்றையதினமே சம்பந்தனின் கையொப்பத்தினைப் பெற்று விக்னேஸ்வரனின் கோரிக்கையை நிறைவு செய்துவிட்டதாக நான் பதில் மின்னஞ்சல் அனுப்பினேன். கஜேந்திரகுமாரும் அன்றைதினமே பின்னிரவில் கையொப்பம் இட்டிருந்தார். மறுநாள் விக்னேஸ்வரன் மட்டுமே கையொப்பமிட வேண்டியிருந்தது. அச்சமயத்தல், விக்னேஸ்வரன் அணியில் உள்ள பங்காளிகள் தாமும் கையொப்பம் இடவேண்டும் என்று அழுத்தங்களை பிரயோகிப்பதாக தகவல்கள் எனக்கு கிடைத்தது. 

நான் நேரடியாக விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு நான் கேள்விப்படும் விடயங்களைக் குறிப்பிட்டு விக்னேஸ்வரனை கையொப்பம் இடுமாறும் அவ்வாறு பங்காளிக்கட்சிகள் கையொப்பம் இடுவதாக இருந்தால் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் கையொப்பம் இடவேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டேன். அத்துடன் மாலை ஆறு மணி வரையிலேயே அனைவரின் கையொப்பத்தினை பெறுவதற்கான காலம் இருக்கின்றது என்பதையும் அவருக்கு நினைவு படுத்தியிருந்தேன்.

அவர் எந்தவிதமான பதில்களையும் தெரிவிக்காத நிலையில் தன்னுடைய கையொப்பத்தினை மட்டும் மின்னஞ்சல் ஆவணத்தில் இட்டு நண்பகலளவில் அனுப்பி வைத்திருந்தார். 

அந்த மின்னஞ்சல் கிடைத்ததும் மின்னஞ்சல் சங்கிலியில் இருந்த கலாநிதி குருபரன், ஆவணத்தில் கையொப்பம் இட்டமைக்கும் கையொப்பம் இடும் விவகாரத்தினை சுமூகமாக தீர்த்து வைத்தமைக்கும் நன்றிகளைத் தெரிவித்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். 

பின்னர் கையொப்ப ஆவணத்தினை நான் பரிசோதித்தபோது விக்னேஸ்வரனின் கையொப்பம் சற்று இடம் மாறியிருந்தது. ஆகவே அவரிடத்தில் மீண்டும் கையொப்பம் இடவேண்டியிருந்தது. 

நான் விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு விடயத்தினை விளக்கி மீண்டும் கையொப்பத்தினை இடுமாறு கோரியிருந்தேன். இக்காலத்தில் ஏனைய சிவில் அமைப்பினர், திருமலை மாவட்ட ஆயர் உள்ளிட்டவர்களின் கையொப்பங்களும் ஒன்றன் பின்னர் ஒன்றாக வந்தன. 

ஆயரின் கையொப்பம் வந்தபோது அதனை எவ்விடத்தில் வைத்து ஒழுங்குபடுத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதன்போது அனைவரின் கையொப்பங்களுக்கும் ஆசீர்வாதம் அளிக்கும் வகையில் இறுதியாக ஆயரினதும், வேலன் சுவாமிகளினதும் கையொப்பத்தினை வைப்போம் என்று முன்மொழிந்தேன். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். 

அப்போது நேரம் 5மணியை எட்டியிருந்தது. விக்னேஸ்வரனின் புதிய கையொப்பம் கிடைக்காமையினால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அப்போது தான் கையொப்பம் இட்டுள்ளதாக கூறினார். அவருடைய கையொப்பம் 5 மணி 8 நிமிடமளவில் கிடைத்தது.

அவருடைய கையொப்பம் மட்டும் அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சலில் மேலதிகமாக ஒருவிடயத்தினை குறிப்பிட்டிருந்தார். அதாவது, இறுதி செய்யப்பட்ட ஆவணத்தினை அனுப்பிய பின்னர் தன்னுடைய கோப்பில் வைப்பதற்காக ஒரு பிரதியினை அனுப்பி வைக்குமாறே கோரியிருந்தார். 

இறுதியாக ஆறுமணிக்கு சற்றே தாமதமாக வேலன் சுவாமிகளின் கையொப்பம் வந்திருந்தது. அவர் வெளியிடத்திற்குச் சென்று திரும்புவதற்கு தாதமாகியதாக காரணம் கூறப்பட்டதோடு அதனை இணைத்துக்கொள்ளுமாறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர். 

அதன்பிரகாரம் அக்கையொப்பத்தினையும் இணைத்து இணைத்து உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் செயற்பாட்டை ஆரம்பித்துவிட்டேன். நள்ளிரவை அண்மித்திருந்த நிலையில் 47 நாடுகளுக்குமான மின்னஞ்சலை அனுப்பி விட்டு இறுதியாக எனது உட்பெட்டியினை பார்த்தபோது 7.20மணியளவில் விக்னேஸ்வரன் தன்னுடைய பங்காளிக்கட்சித்தலைவர்களினது கையொப்பங்களுடனான ஆவணத்தினை அனுப்பி வைத்திருந்தார். 

அதில் எந்தவிதமான குறிப்புக்களும் இட்டிருக்கவில்லை. ஆகக்குறைந்தது தமது தரப்பு கையொப்ப ஆவணம் இதுதான் என்று கூட எழுதப்பட்டிருக்கவில்லை. ஆகவே ஏற்கனவே அனுப்பிய ஆவணத்தற்கு அவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளார்கள் போல் உள்ளது என்று கருத்தியதோடு நேரம் நள்ளிரவாகியிருந்தமையால் அவரை நான் தொடர்பு கொண்டிருக்கவில்லை. 

இதுதான் நடந்தது. நான் அன்றையதினம் மாலையில் இரண்டாவது தடவையாக கையொப்பம் கோரி அழைப்பெடுத்தபோது அவருடைய பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளும் விக்னேஸ்வரனின் வீட்டில் இருந்ததாக எனக்குப் பின்னர் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆகவே அவருடைய பங்காளிக்கட்சிகளையும் வைத்துக்கொண்டு தான் அவர் தனித்து கையொப்பமிட்டு அனுப்பி விட்டு தற்போது நெருக்கடிகள் அவருடைய கூட்டுக்குள் ஏற்பட்டவுடன் என்மீது பழியைப் போடுகின்றார். 

அதற்காக அவருடைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களையும் இணைத்ததாக தமது பங்காளிக்கட்சித்தலைவர்களின் கையொப்பங்களை ஏன் இணைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பி நிலைமைகளை சுமூகமாக்க முனைந்திருந்தார். அதன்போது உங்களுக்கு கூறிய மேற்படி விளக்கத்தினை அவருக்கு அளித்துள்ளேன்.

அதுமட்டுமன்றி அவரது அணிக்குள் இருக்கும் பிரச்சினை தீர்க்கமுடியாது என்னுடைய தலையில் அனைத்துப்பழிகளையும் சுமத்த விளைந்தால் மின்னஞ்சலை முழுமையாக பகிரங்கப்படுத்துவேன் என்பதையும் அவருக்கு நேரடியாகவே கூறியுள்ளேன் என்றார்.