இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களது 1000 ரூபா வேதன அதிகரிப்பிற்கு கால அவகாசம் வழங்கியுள்ள அரசாங்கம்…!

0
451

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு, முதலாளிமார் சம்மேளனத்துக்கு இலங்கை அரசாங்கம் 2 வாரங்கள் காலக்கெடு விதித்துள்ளது.

தொழில்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை 2015ம் ஆண்டில் இருந்து முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டு வந்துள்ள போதும், இதுவரையில் சாத்தியப்பட்டிருக்கவில்லை.

அத்துடன் தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் நடைபெற்ற இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பெருந்தோட்ட நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட பொறிமுறைமையின் படி, அடிப்படை வேதனமான 700 ரூபாவை அதிகரிக்காமல், வினைத்திறன் மற்றும் உற்பத்தி கொடுப்பனவுகளை அதிகரித்து, அத்தோடு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாயக் கொடுப்பனவான ஊழியல் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றையும் சேர்ந்த 1025 ரூபாவை வழங்க நிறுவனங்கள் முன்வந்தன.

அத்துடன் குறித்த பொறிமுறையின் அடிப்படையில் 3 தினங்களுக்கும், வினைத்திறன் அடிப்படையிலான கொடுப்பனவு 3 தினங்களுக்குமாக கலப்பு முறைமை ஒன்றையும் பின்பற்றுவதற்கான யோசனையை பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்திருந்தன.

எனினும் இதனை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்திருந்தன.

இந்த நிலையில் நேற்று 25ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் படி, வேதன நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் நாளைய தினம் வேதன நிர்ணய சபை கூட்டப்படவுள்ளது.

இதில் தொழில் அமைச்சரினால் நியமிக்கப்படுகின்ற 3 பிரதநிதிகளும், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக தலா 7 பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படுவார்கள்.

நாளைய தினம் வேதன நிர்ணய சபை கூட்டப்பட்டு, 14 நாட்களின் பின்னர் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு அளவை இறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், குறித்த 2 வாரக் காலப்பகுதிக்குள் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பினை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்குவதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பெருந்தோட்ட நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் இந்தவிடயத்தில் இணக்கப்பாட்டுக்கு வராத பட்சத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த அடிப்படை வேதனமாக 860 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 140 ரூபாவும் வழங்கி, 1000 ரூபாய் என்ற நாளாந்த வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு வேதன நிர்ணய சபை நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அதிகரிக்கின்ற தொகைக்கு தோட்ட நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பவற்றையும் வழங்க வேண்டும்.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் ஒரு அடிமை சாசனம் என சிலர் கூறுகின்ற நிலையில், அதிலிருந்து வெளியேறினால், உண்மையான அடிமை சாசனம் எது என்பது தெரியவரும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.