சீனாவின் ஆதிக்கமே இலங்கையின் கிழக்கு முனையத்தை இந்தியா இலக்கு வைக்க காரணம் – ரில்வின் சில்வா

0
284

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்கியதன் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா இலக்கு வைத்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும் இவ்வாறான நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்குகின்றன என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கிழக்கு முனையத்தை தனித்து அபிவிருத்தி செய்ய முடியாது என்பதன் காரணத்தினாலேயே இந்தியாவிற்கு வழங்குவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் துறைமுக பொறியியலாளர் சங்கம் அபிவிருத்தி பொறுப்புக்களை ஏற்பதற்கு தாம் தயாராகவுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஆசிய நாடுகளில் இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளதால் இலங்கையில் சீனா அதிகளவு தலையிட்டுள்ளதால் இந்தியாவிற்கும் அதற்கு சமமான வாய்ப்பை கோருகிறது.

ராஜபக்ஷாக்கள் இவ்வாறு சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அஞ்சி அவர்களிடம் மண்டியிடுகின்றனர். அதன் காரணமாகவே பாரிய எதிர்ப்புக்கள் வெளியிடப்படுகின்ற போதிலும் கிழக்கு முனையத்தை அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்குகிறது. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் அரசாங்கம் அனைவரதும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.