“ஸ்வஸ்திக்” சின்னம்: பலரும் அறிந்திடாத இரகசியங்கள்

0
3934

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயிலில் நான்கு திசைகளுக்கும் உரிய கோபுரங்கள் நேர் எதிர் எதிரே இல்லாமல் உள்ளதை கவனித்திருக்கின்றீர்களா? இதன் பின்னனியில் மறைந்துள்ளது ஒரு சிதம்பர ரகசியம்! இந்த சிதம்பர ரகசியத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக இந்த “ஸ்வஸ்திக்” வடிவத்தின் சிறப்புகளையும், அதில் மறைந்துள்ள ஆன்மீக ரகசியங்களையும் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

“ஸ்வஸ்திகா” எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் “ஸ்வஸ்திக்” என்னும் சின்னம் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சமய நம்பிக்கைகளுடனும் தத்துவங்களுடனும் “ஸ்வஸ்திக்” சின்னம் தொடர்பு கொண்டது.

“ஸ்வஸ்திக்” சின்னம் இரண்டு கோடுகள் ஒன்றுக்கொன்று குறுக்காக அமைந்து நான்கு முனைகளிலும் 90 டிகிரியில்
வலது பக்கம் வளைந்த சமமான நான்கு கோடுகளுடன் அமைந்துள்ளது.

வடமொழியில் “ஸ்வஸ்திகா”என்பது உடல் நலத்தைக் குறிக்கும். இதில் ‘ஸூ’ என்பதற்கு நல்லது என்றும் ‘அஸ்திகா’ என்பதற்கு நல்வாழ்வு என்பதும் பொருளாக உள்ளது. ஸ்வஸ் + அஸ்தி + கா என்பதின் வார்த்தையே”ஸ்வஸ்திகா”. அதாவது சுவாசம் (ஸ்வாஸ்) நின்று நீ அஸ்தியாகப் (அஸ்தி) போய் மோட்ஷம் பெற காத்திரு என்பதை நினைவுப்படுத்துவதே ஸ்வஸ்திகா.

ஸ்வஸ்திகம் இந்து, புத்த,ஜைன மதங்களில் இடம் பெற்றிருக்கிறது. இந்து மதத்தில் பிரம்மாவின் நான்கு முகங்களாகவும், நான்கு திசைகளைக் குறிப்பதாகவும் “ஸ்வஸ்திகா”வருகிறது.

புத்த மதப் புத்தகங்களின் ஆரம்பத்தில்”ஸ்வஸ்திக்”முத்திரை இருக்கும். ஜைன சமயத்தில்”ஸ்வஸ்திக்” முக்கிய சின்னமாகவும், எட்டு மங்கலங்களில் ஒன்றாகவும் கலந்துள்ளது. ஜைனர்களின் ஏழாவது தீர்த்தங்கரரான சுபார்சுவ நாதரின்சின்னமாக “ஸ்வஸ்திகா” விளங்குகிறது. “ஸ்வஸ்திகா” இல்லாத பூசைகளை ஜைன வீடுகளில் காணவே முடியாது.

ஜைன மதத்தில் ஸ்வஸ்திக் சின்னத்தின் ப்ளஸ் (+)ல் உள்ள இரு கோடுகளும் இல்லறம் மற்றும் துறவறத்தைக் குறிக்கும். இரு கோடுகளும் சந்திக்கும் புள்ளி கொல்லாமையைக் குறிக்கும்.

உயிர், அதனுடைய வினைகளைப் பொருத்து, தேவ கதியாகவும், மனித கதியாகவும், விலங்கு கதியாகவும்,நரக கதியாகவும் சுற்றிச் சுற்றிப் பிறக்கிறது. தீய வினைகள் குறையக் குறைய பிறவியின் தரமும் உயரும். எனவே மனிதனின் எல்லாச் செயல்களும் நல்லதாகவும் அறநெறியுடனும் இருக்க வேண்டும். நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

இறைவன், ஆகமம் மற்றும் குரு மீது நம்பிக்கையும் பக்தியும் வைத்து, இதனால் முற்றுமுணர்ந்த நிலையை அடைந்து, மீண்டும் பிறவா வீடுபேறை அடையலாம் என்கிறது இந்து மதம். இதனை அறிவுறுத்துவதே “ஸ்வஸ்திகா” ஆகும்.

யஜீர் வேதத்தில் ஸ்வஸ்திக் சின்னத்தை பற்றி குறிப்பு உள்ளது. அதாவது, சகல வளங்களும் நிறைந்த நல்வாழ்வை தருவதற்காக, தேவர்களை குறித்து செய்யப்படும் பிரார்த்தனையாக இந்த”ஸ்வஸ்திக்” குறியீடு உள்ளது.

“ஸ்வஸ்திக்”சின்னத்தின் மகத்துவம் என்ன?

நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான் நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே “ஸ்வஸ்திகா” என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.

யஜுர் வேதத்தில் வரும் “ஸ்வஸ்திகா” பற்றிய ஒரு ப்ரார்த்தனை.

“ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;

ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:|

ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:

ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத” ||

எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது. இதில் வரும் ‘ஸ்வஸ்தி’ என்ற வார்த்தை “தடையற்ற நல்வாழ்வு” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இந்த ஸ்வஸ்தியைக் குறிக்கிற சின்னமாக “ஸ்வஸ்திகா” வடிவம் பயன்படுத்தப்படுகிறது

வேத பிரார்த்தனையில் உள்ள ‘ஸ்வஸ்தி’ என்ற வார்த்தை ‘தடைகள் இல்லாத நல்வாழ்வு’ என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகின்றது. அந்த நிலையை ஏற்படுத்தும் சின்னமாக ‘ஸ்வஸ்திகா’ எனப்படும் ‘ஸ்வஸ்திக்’ வடிவம் பயன்படுத்தப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் வலது கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தின் வடிவமே ‘ஸ்வஸ்திக்’ என்றும் ஒரு கருத்து இருக்கின்றது. செங்கோண வடிவத்தில், மேலிருந்து கீழாக மற்றும் இடமிருந்து வலமாக, ஒன்றுக்கு ஒன்று குறுக்காக செல்லும் கோடுகள் மூலம்”ஸ்வஸ்திக்” வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திக் சின்னத்தில் இருக்கும் எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிப்பதாகவும், அந்த திசைகளிலிருந்து புறப்படும் சுப காரிய தடையை உண்டாக்கும் சக்திகளை ‘ஸ்வஸ்திக்’வடிவம் தடுப்பதாகவும் ஐதீகம் உண்டு.

இந்திய ஆன்மீக பண்பாட்டு ரீதியாக, வீட்டின் தலைவாசல், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை வைக்கும் இடங்கள், பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, கணக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், வழிபாட்டுக்குரிய தலங்கள் ஆகிய சகல இடங்களிலும் ‘ஸ்வஸ்திக்’ வடிவ சின்னம் பயன்படுத்தப்படுகிறது.

“ஸ்வஸ்திக்”சின்னம் வரையும் முறை :

ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவதற்கென்று பிரத்யேகமான ஒரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, முதலில் இடமிருந்து வலமாக உள்ள மூன்று கோடுகளை வரைந்து கொள்ளவேண்டும். பின்னர், கீழிருந்து மேலாக மற்ற மூன்று கோடுகளையும் வரைய வேண்டும். இந்த முறைப்படிதான் சகல இடத்திலும்”ஸ்வஸ்திக்” சின்னம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து விதமான நலன்களும் ஏற்படும் என்பது ஐதீகம்.

இவ்வாறு வரையப்பட்ட ஸ்வஸ்திக் சின்னத்தை வண்ணங்களால் அலங்கரிக்க விரும்புபவர்கள், மஞ்சள் நிறத்தில் பட்டையான கோடுகளை வரைந்த பிறகு, அவற்றின் மையப்பகுதியில் குங்குமம் மூலம் பொட்டிட்டு அலங்கரிப்பது, மங்கள சக்திகளை ஈர்ப்பதாக தாத்பரியம் உண்டு.

“ஸ்வஸ்திக்” வடிவத்தின் இரண்டு வகைகள் :

“ஸ்வஸ்திக்”சின்னமானது வலப்புற சுற்று மற்றும் இடப்புற சுற்று ஆகிய இரண்டு நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, மங்களமான சக்திகளை ஈர்க்கக்கூடிய வலப்புற சுற்று அமைந்த (அதாவது கடிகார முள் சுற்றுவதுபோல) சின்னம்தான் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாறாக, இடப்புற சுற்றாக (கடிகார முள் சுற்றுவதற்கு எதிர்ப்புறமாக) பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திக் சின்னம் தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை பெற்றதாக கருதப்படுகிறது. அதனால், சின்னத்தை வரையும்போது கவனமாக இருப்பது அவசியம்.

சமஸ்கிருதத்தில் ஸ்வஸ்திகா என்பது “அதிர்ஷ்டம், நன்மை” என்ற பொருள் கொண்டதாகும். மேலும் இச்சின்னத்தை பயன்படுத்துவதால் அங்கு நேர்மறை சக்திகள் அதிகம் ஈர்க்கப்படும். தீய சக்திகள் அங்கிருந்து நீங்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செல்வத்தை பெருக்கும்.

எனவே ஒருவர் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை அவர் வீட்டின் பூஜையறையின் சுவற்றில் குங்குமம் மற்றும் மஞ்சளாலும், மேலும் வீட்டின் கதவு, பணப்பெட்டி, வாகனங்கள் போன்றவற்றில் சிகப்பு, மஞ்சள், பச்சைநிற வண்ணங்களில் வரைந்தோ அல்லது ஸ்டிக்கராகவோ ஒட்டிக்கொள்வது அனைத்து விதமான நன்மைகளையும் ஏற்படுத்தும்.

ஸ்வஸ்திக் சின்ன அடையாளத்தில் குறிப்பிட்டுள்ள நான்கு கோடுகளும் கடிகார திசையில் இருப்பது நான்கு மறுபிறப்பு இடங்களை குறிக்கிறது. நமது மறுபிறப்பு என்பது இவ்வுலகில் மிருகமாகவோ அல்லது தாவரமாகவோ இருக்கலாம் அல்லது நரகத்தில் அல்லது பூமியில் அல்லது ஆன்ம உலகில் இப்படி நான்கு உலகை குறிக்கிறது.

“ஸ்வஸ்திகா” வடிவம் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை அழிக்கக்கூடியது. “ஸ்வஸ்திகா” சின்னம் நாம் மனதார கும்பிடும் கணபதியின் இடது கையில் பொறிக்கப்பட்டு இருக்கும். “ஸ்வஸ்திகா “சின்னம் கடவுளின் இருப்பிடம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த ஸ்வஸ்திகா சின்னம் தெய்வங்கள் வசிக்கும் இடமாகும்.

இந்த ஸ்வஸ்திகா அடையாளம் வரையப்பட்ட இடத்தில் செல்வமும் செழிப்பும் பொங்கிப் பெருகும். சுவஸ்திக் சின்னத்தின் சிறப்பு என்னவென்றால் தெய்வசக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது. ‘ஸ்வஸ்திக்’சின்னம் எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானது.

விநாயகர், மகாலட்சுமி ஆகிய இருவருக்கும் உரிய மங்கலச்சின்னமாக ‘ஸ்வஸ்திக்’ வடிவம் கருதப்படுகிறது. சிதம்பரம் ஆலயத்தின் மைய பகுதியில் “பொன்னம்பலம்” அமைக்கபட்டதன் பின்னனியில் உள்ள ரகசியம்!

மற்ற ஆலயங்களை போல சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயிலின் நான்கு திசைக்குரிய (கிழக்கு- மேற்கு, வடக்கு- தெற்கு) கோபுரங்களும் நேர் எதிர் எதிராக இருக்காது. இதன் பின்னனியில் மறைந்து உள்ள காரணம் இந்த கோயில் ஸ்வஸ்திக் வடிவில் அமையப்பெற்ற ஸ்தலமாகும்.

சிதம்பரம் ஆலயத்தில் “ஸ்வஸ்திகா” வடிவத்தின் இரண்டு கோடுகள் ஆரம்பிக்கும் இடம் ஆலயத்தின் நான்கு திசை கோபுர வாயில்கள் ஆகும், அந்த இரண்டு கோடுகளும் சந்திக்கும் (இணையும்) இடமான மைய புள்ளியில் தான் மூலஸ்தானமான “பொன்னம்பலம்” அமைந்துள்ளது. “ஸ்வஸ்திக்”சின்னத்தில் நடுவில் உள்ள புள்ளியின் அர்த்தம் என்னவென்றால் நடுப்புள்ளி நம் ஆத்மாவை குறிக்கும்.

ஒவ்வொரு உயிரிலும் உள்ள ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டே வேண்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் சின்னத்தின் நடுவில் புள்ளி இருப்பது போன்று சிதம்பரம் ஆலயத்தில் நான்கு திசை கோபுர வாயில்களிலிருந்து “ஸ்வஸ்திக்” வடிவத்தின் இரண்டு கோடுகள் ஆரம்பிக்கபட்டு அந்த இரண்டு கோடுகளும் இணையும் இடமான (மைய புள்ளியில்) சிதம்பரம் ஆலயத்தின் மூல ஸ்தானமான”பொன்னம்பலம்” அமைக்கபட்டுள்ளது என்பது எவருக்கும் தெரியாத சிதம்பர ரகசியமாகும்

“ஸ்வஸ்திக்”சின்னத்தின் மற்ற வளைவு நான்கு கோடுகளும் எல்லையற்ற அறிவு, எல்லையிலாக் காட்சி, அளவில்லாத ஆற்றல், அளவற்ற இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும்.

இந்த நான்கு குணங்களை மனித உயிர் தன் அருந்தவப் பயனால் பெற்று, வினைகளை வென்று, சிவம் ஆக மாற வேண்டும் என்பதற்காகவே நால்வர் பெருமக்கள் நான்கு வாசல்கள் வழியாக வந்து ஆலயத்தின் மையப்புள்ளியில் அமைக்கபட்டுள்ள பொன்னம்பலத்தை தரிசனம் செய்துள்ளனர்.

அது ஏன் நால்வர் பெருமக்கள் நான்கு வாசல்கள் வழியாக வந்து ஆலயத்தின் மையப்புள்ளியில் அமைக்கபட்டுள்ள பொன்னம்பலத்தை தரிசனம் செய்துள்ளனர் என்ற விவரத்தையும் தெரிந்துக் கொள்வோம்.

சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிதம்பரத்தில் நடராஜனைக் காண திருக்கோயிலுக்குள் வந்தார்கள். சம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார்.

நாவுக்கரசர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார்.

சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர்.

மாணிக்கவாசகர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார்.

“ஸ்வஸ்திக்” வடிவம் சிவபெருமானை அடைவதற்கு உரிய சின்னமாகும்.