எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க டி.டி.வி. தினகரன் பேரம் பேசினார்

0
523
Paneer Selvam says Edappadi Palaniswami government

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க டி.டி.வி. தினகரன் தன்னிடம் பேரம் பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். (Paneer Selvam says Edappadi Palaniswami government)

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அ.தி.மு.கவினர் மேற்கொள்ள வேண்டிய களப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கிய போது, கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவிக்கையில்,

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புரட்சித் தலைவி அம்மா தலைமையில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2 ஆவது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்தோம். ஆனால் அம்மா உடல்நலம் குன்றி மரணம் அடைந்தார். அப்போது நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இருந்தேன்.

ஆனால் இந்த ஆட்சி நடக்கக்கூடாது என்று எண்ணத்தில் ஒரு கும்பல் செயற்பட்டது. என்னிடம் இருந்து முதலமைச்சர் பதவியை பிடுங்க திட்டமிட்டனர். அவர்களது சதி திட்டம் தெரியவந்ததால் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டேன்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. எம்.எல்.ஏ.க்களை கூவத்தூருக்கு அழைத்து சென்று அடைத்து வைத்திருந்தனர். சசிகலாவும் முதலமைச்சராகி விட வேண்டும் என்று பல சதிகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் சசிகலா சிறைக்கு சென்று விட்டார்.

புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். ஆனாலும் அந்த கும்பல் தொடர்ந்து பதவி ஆசையுடன் சுற்றி திரிந்தது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி. தினகரன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் எனக்கு 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

டி.டி.வி. தினகரன் என்னிடம் வந்து தனக்கு ஆதரவாக 42 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். உங்களிடம் 11 பேர் இருக்கிறார்கள் எனவே நம்மிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என்று பேரம் பேசினார். ஆனால் என் மனசாட்சி இதற்கு சம்மதிக்கவில்லை.

புரட்சித் தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்கும் துரோகத்தை செய்ய விரும்பவில்லை. ஆகையால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தேன்.

இதனையடுத்து, டி.டி.வி.தினகரன் பக்கம் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. அவரது ஆட்சி கவிழ்ப்பு திட்டமும் நம்மிடம் எடுபடவில்லை. இனியும் எடுபடாது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை புரட்சித்தலைவி அம்மா கட்சியில் இருந்து நீக்கினார்.

சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டதால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சசிகலா கட்சி பணிகளில் ஈடுபடமாட்டார் என்று எங்களிடம் அம்மா கூறினார்.

தற்போது டி.டி.வி.தினகரன் இந்த கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற துடிக்கிறார். எவ்வித மன்னிப்பு கடிதமும் கொடுக்காமல் கட்சியில் சேர்ந்ததாக தொண்டர்களை ஏமாற்றி வருகிறார். தினகரன் எப்போது கட்சியில் சேர்ந்தார்? என்பது குறித்து அவர் முதலில் சொல்லட்டும்.

இதுநாள் வரை தினகரன் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கவில்லை. இதுதான் உண்மை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் கட்சியில் சேர்க்கப்படாமலே அ.தி.மு.க. எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியுமா?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றி போலியானது. 20 ரூபாய் நோட்டில் கையெழுத்துபோட்டு கொடுத்து ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அவர் கொடுத்ததாக தொகுதி முழுவதும் பேசுகிறார்கள்.

ஆனால் திருப்பங்குன்றத்தில் அந்த 20 ரூபாய் நோட்டு ஜெயிக்காது. இங்கே உள்ள மக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசிகள். இரட்டை இலை சின்னத்தை தங்கள் உயிர்போல நினைக்கிறார்கள்.

எனவே 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். எதிர்க்கட்சியையும், துரோகியையும் திருப்பரங்குன்றம் மக்கள் புறக்கணிப்பார்கள். அந்த வகையில் நம் தேர்தல் பணி அமைய வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Paneer Selvam says Edappadi Palaniswami government