கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

0
557
loosen rules co-operative bank loans - anbumani demand

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.loosen rules co-operative bank loans – anbumani demand

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதற்கான விதிகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி அந்த வங்கிகளின் பணியாளர்கள் கடன் வழங்க மறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் நடத்தும் போராட்டம் அவர்களுக்கான கோரிக்கைகள் சம்பந்தப்பட்டதில்லை. மாறாக கூட்டுறவு வங்கிகளின் எதிர்கால நலன் சார்ந்தது என்பதை அரசு உணர வேண்டும்.

வேளாண்மை மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான முதலீடு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் தமிழக அரசின் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கல் விதிகள் மாற்றப்படவில்லை.

இதனால் வணிக வங்கிகளுடன் ஒப்பிடும் போது கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கும் கடன் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில் வட்டி மிகவும் அதிகமாக இருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு தான் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை விவசாய நகைக்கடன் வழங்க அரசு அனுமதிக்க வேண்டும். பயிர் கடன் பெறும் விவசாயிகள் கடன் தொகையில் 30 விழுக்காட்டுக்கு உரம் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும்.

சிறு வணிக கடன் தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் கடன் மறுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் இப்படித் தான் கடன் வழங்கி வருகின்றன.

அதேநேரத்தில், இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலமே இருண்டு விடும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாடு முழுவதும், 4,645 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள் செயல்படுகின்றன.

அவற்றில் 75 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவர்கள் தான் கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள்.

அவர்களுக்கு பயனுள்ள வகையில் கடன் வழங்கினால் தான் அவர்கள் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.

ஆனால், வணிக வங்கிகள் எந்த ஆவணமும் இல்லாமல் 4% வட்டியில் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் ஓர் ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.32,000 மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அதற்கு 7% வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகை குறைவாகவும், வட்டி அதிகமாகவும் இருந்தால் உழவர்கள் கூட்டுறவு வங்கிகளை நோக்கி எப்படி வருவார்கள்? அவர்கள் படிப்படியாக வணிக வங்கிகளுக்கு மாறிச் செல்கின்றனர்.

இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க எவருமே முன்வர மாட்டார்கள்.

ஒரு கட்டத்தில் கூட்டுறவு வங்கிகளுக்கு மூடு விழா நடத்த வேண்டியிருக்கும்.

அது கூட்டுறவு வங்கிகளுக்கும் நல்லதல்ல…. உழவர்களுக்கும் நல்லதல்ல. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

பயிர்க்கடன் வழங்க விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உதாரணமாக கடந்த 2017&18 ஆம் ஆண்டில் ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ரூ.2,000 கோடி மட்டும் தான் கடன் வழங்க முடிந்தது. நடப்பாண்டில், ரூ.8,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதல் 3 மாதங்களில் 61,851 உழவர்களுக்கு ரூ.417 கோடி மட்டுமே பயிர்க்கடன் வழங்கப் பட்டுள்ளது. பயிர்க்கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை முழுவதும் கடனாக வழங்கப்படா விட்டால் கூட்டுறவு வங்கிகளுக்குத் தான் இழப்பு ஏற்படும்.

பயிர்க்கடனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை உழவர்களுக்கு வழங்காமல் வங்கிகளிலேயே வைத்துக் கொண்டிருப்பது என்ன வகையான கொள்கை?

இவை ஒருபுறமிருக்க திங்கட்கிழமை முதல் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் உழவர்கள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நீடிப்பதால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறுவை நெற்பயிர் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்திலும், சம்பா பயிருக்கு மேல் உரம் வைக்க வேண்டிய நேரத்திலும் இந்தப் போராட்டம் நீடிப்பது பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

எனவே, கூட்டுறவு வங்கி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :