யாழ்ப்பாணமே அதிரும் ஒரு சம்பவம் நடக்கும்; பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

0
475
threat female journalist Jaffna

யாழ். மாவட்டத்திலுள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (threat female journalist Jaffna)

வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும் படியான செய்தி வரும் அதனை பிரசுரிக்க தயாராக இருங்கள் எனவும் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில். இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் தொடர்பான செய்தி வெளிவந்து இருந்தது.

குறித்த செய்தியானது தனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது எனவும், அந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தார்.

அதேவேளை குறித்த உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்றிணைந்து உறுப்பினர் தொடர்பிலான செய்தி வெளிவந்த பத்திரிகையின் பிரதிகள் சிலவற்றையும், அப்பத்திரிக்கை பிரதி போன்று பெரியளவில் பிரதி செய்யப்பட்டதையும் தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடாத்தி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடாத்தி உறுப்பினரின் உருவ பொம்மையை எரித்தனர்.

அவை தொடர்பிலான செய்தியையும் குறித்த பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி வடமாகாண சபை உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் மீண்டும் குறித்த பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள்.

அந்த போராட்டம் தொடர்பிலான செய்தியை குறித்த பத்திரிகை பிரசுரிக்கவில்லை. அது தொடர்பில் குறித்த மாகாண சபை உறுப்பினரின் ஊடாக இணைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் குறித்த பத்திரிகையின் அலுவலக செய்தியாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஏன் அந்த போராட்டம் தொடர்பிலான செய்திகளை வெளியிடவில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு செய்தியாளர், அது தொடர்பில் பிரதம ஆசிரியரிடம் கேளுங்கள் என பதிலளித்துள்ளார்.

அதற்கு அந்த நபர் ‘நீங்கள் முதலமைச்சர் சொல்வதனை கேட்டு எழுதிக்கொண்டு இருங்கோ.. 30ஆம் திகதி யாழ்ப்பாணமே அதிருகின்ற மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் அதனை எழுத தயாராக இருங்கள்’ என அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் குறித்த அலுவலக செய்தியாளர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; threat female journalist Jaffna