7 தமிழர் விடுதலை தொடர்பான தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார். Rajiv Murder Perarivalan Mother Atputhammal
இதேபோல நளினியின் தாயார் பத்மாவும், மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பாக, அற்புதம்மாள் கூறியதாவது:
“ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. 28வது ஆண்டாவது, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பதாக கூறியது மகிழ்ச்சி. ஜெயலலிதா, இவர்கள் விடுதலை தொடர்பாக இருமுறை அறிவித்தார். எனவே உடனடியாக தமிழக அரசு, எனது மகனை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கைவிடுக்கிறேன். முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சரை இன்று அல்லது நாளை நான் சந்தித்து, கோரிக்கை விடுப்பேன். விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரை செய்ய கோரிக்கைவிடுப்பேன்” இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார்.
நளினியின் தாய் பத்மா: ஒரு கோடி குடம் பாலை தலையில் ஊற்றியதை போல எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 28 வருட காலம் அவர்கள் பட்ட ரணம் கொஞ்சமில்லை. ஒவ்வொரு நாளும் கண்ணீராக சிந்தி கொண்டு இருந்தேன். புள்ளைங்க வரணும், புள்ளைங்க வரணும் என ஏங்கினேன். என் பிள்ளை மட்டுமல்ல 7 பிள்ளைகளும் வெளியே வர வேண்டும். 28 வருடம் சிறையில் வாடியுள்ளனர். இதைவிட வேறு ரணம் என்ன உள்ளது. இதைவிட தண்டனை என்ன உள்ளது? ” இவ்வாறு பத்மா தெரிவித்தார்.