மீண்டும் அரச தலைவர் தேர்தல் நடத்துவது நாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அல்ல. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். முதலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசமைப்பை உருவாக்கவேண்டும். Jayampathy Presidential Election
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தலைவர்களாக மாறிவிடவேண்டாம் என்பதை இந்த அரசின் தலைமைகளுக்கு சுட்டிக்காட்டுகின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற வழிகாட்டல் குழுவின் உறுப்பினராகவும் உள்ளவர் அவர். புதிய அரசமைப்பை உருவாக்கத்தின் பின்னணியில் கடுமையாக உழைத்து வரும் ஒருவர்.
புதிய அரசமைப்பு உருவாக்கப்படாவிட்டால், நடுநிலையாகச் செயற்பட்டுவரும் தமிழ்த் தலைவர்களுக்குப் பெரும் தாக்கம் ஏற்படும், அவர்கள் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பொய்யாகிப்போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“புதிய அரசமைப்பு உருவாக்கம் முழுமைப்படுத்தக் கூடிய நிலமை உருவாகியுள்ளது. இந்த ஆட்சிக் காலத்தினுள் அரசமைப்பை முழுமைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசிலுள்ள சகல தரப்பினரிடமும் உள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரச தலைவரும், தலைமை அமைச்சரும் நிறைவேற்றவேண்டும்.
இந்த நாட்டின் நீண்டகால அரசியல் பிரச்சினை, தமிழ் மக்களின் நெருக்கடிகள், கடந்த கால அசம்பாவிதங்களை தடுக்க புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வுகள் பெற்றுத்தருவதாக இந்த நாட்டு மக்களுக்கு அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது.
புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்றால் மைத்திரிக்கும், ரணிலுக்கும் முதன்மையான இரண்டு கட்சிகளுக்கும் அக்கறை இருக்கவேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற உணர்ச்சி இருக்கவேண்டும். அது இல்லாது புதிய அரசமைப்பை உருவாக்கமுடியாது.
இன்று வாக்குறுதிகளை மறந்து மீண்டும் அரச தலைவர் தேர்தல் குறித்து பேசும் நிலைமை உருவாகியுள்ளது. அரச தலைவர் தேர்தல் இனி நடைபெறாது என்றே நாம் ஆரம்பம் முதல் தெரிவித்து வந்தோம். 2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல்தான் இந்த நாட்டில் நடைபெறும் இறுதி அரச தலைவர் தேர்தல் என்று கூறினோம். மேடைக்கு மேடை அரச தலைவரும், தலைமை அமைச்சரும் இதனையே தெரிவித்தனர்.
இன்று மீண்டும் அரச தலைவர் வேட்பாளர், 2020ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல் என்று கூறிக்கொண்டு உள்ளனர். அரச தலைவர் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது, இரகசிய பேச்சுக்கள் நடத்துவது, எதிரிகளாக இருந்தவர்கள் ஒன்றிணைந்து களமிறங்குவது என்ற பல்வேறு சூழ்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
இது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அல்ல. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். முதலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசமைப்பை உருவாக்கவேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தலைவர்களாக மாறிவிடவேண்டாம் என்பதை நாமும் இந்த அரசின் தலைமைகளுக்குத் தெரிவிக்கின்றோம்.
இன்று அரசமைப்பை உருவாக்கமுடியாதுபோனால் அதன் மூலமாக பெரிய தாக்கம் நடுநிலையாக செயற்பட்டுவரும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கே ஏற்படும். தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இன்று நடுநிலையான தமிழ்த் தலைமைகள் செயற்பட்டு வருகின்ற நிலையில் அரசமைப்பு உருவாகாதபட்சத்தில் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளே உருவாகும்.
அவர்களின் உரிமைகளை மக்களாட்சியைப் பலப்படுத்தப்படுவதன் மூலமாக மட்டுமே நாட்டை வெற்றிகொள்ளமுடியும். அன்று எந்தக் காரணத்துக்காக தமிழ்த் தரப்பு போராட்டத்தைக் கையில் எடுத்ததோ இன்று அதே நோக்கத்தை வெற்றிகொள்ள அரசியல் ரீதியில் பயணித்து வருகின்றனர்.
ஜனநாயக ரீதியில் அவர்கள் சிந்தித்து சிங்கள மக்களின் மனங்களை வெற்றி கொண்டு அதன் மூலமாக இந்த நாட்டினைக் கட்டியெழுப்பவேண்டும் என சிந்திக்கின்றனர். அதற்கு நாம் மதிப்பளிக்கவேண்டும்.இறுதி தேர்தலில் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு இலட்சம் வாக்குகள் பறிபோயுள்ளன. இதில் 50 ஆயிரம் வாக்குகள் ஜனநாயகக் கட்சிகளுக்கு சென்றுள்ளன. அதனை மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் எஞ்சிய 50 ஆயிரம் வாக்குகள் வடக்கின் அடிப்படைவாத கட்சிகளுக்கே சென்றுள்ளன. தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும். அந்தப் பொறுப்பு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் உள்ளது” என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
- யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- கடற்படையினரிடம் உள்ள கால்நடைகளை பிடித்து தருமாறு கோரிக்கை
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி