வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி

0
682
Emphasize international inquiry demonstration protest mannar

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. (Emphasize international inquiry demonstration protest mannar)

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவினர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணியில், சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பேணி, மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

இந்தப் பேரணியில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் எங்கே?, வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே?, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே?,
இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே?, புதிய ஜனாதிபதியே இன்னும் ஏன் மௌனம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் எத்தனை காலத்திற்கு என பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட அருட் தந்தையர்களான பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் மற்றும் நிகால் ஜிம்பிறவுண் அடிகளார் ஆகிய இருவரது படங்களையும் ஏந்தியவாறும் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்பின்னர் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்ராஜிடம் கையளிக்கப்பட்டது.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர், நான் ஒரு அரச அதிகாரி என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் படுகின்ற வேதனையை நன்கு அறிவதாகவும் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களும் உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் ஜனாதிபதிக்கு உங்களின் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டு அதன் தகவல் உங்களுக்கு வழங்கப்படும் என்றும் மேலதிக தகவல்களை ஜனாதிபதி உங்களுக்கு அனுப்பி வைக்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என்றும் தெரிவித்தார்.

குறித்த பேரணிக்கு மன்னார் மாவட்டத்தில் பணியாற்றுகின்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம், மன்னார் பிரஜைகள் குழு, மாதர் அபிவிருத்தி ஒன்றியம், மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் ஆகிய அமைப்புக்கள் மற்றும் மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் என பல அமைப்புக்கள் தங்களது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Emphasize international inquiry demonstration protest mannar