ராணுவ உயரதிகாரிகள் மீது இன அழிப்பு வழக்கு

0
347

மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீது இன அழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு வலியுறுத்தியுள்ளது. Myanmar Rohingya Genocide

இதுகுறித்து அந்தக் குழு தயாரித்துள்ள முதல் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் அந்த நாட்டு ராணுவம் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் குறித்த எங்களது விசாரணைக்கு அந்த நாட்டு அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
மேலும், சம்பவம் நடந்த இடங்களில் நேரில் சென்று பார்வையிடவும் மியான்மர் அரசு எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இதையடுத்து, செயற்கைக்கோள் படங்களைக் கொண்டும், வன்முறைக்கு அஞ்சி மியான்மரை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வரும் ரோஹிங்கயா அகதிகளின் அனுபவங்களைக் கேட்டும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், ராக்கைன் மாகாணத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரம், பெற்றோரின் கண்முன்னே அவர்களது குழந்தைகள் கொலை செய்யப்பட்டது போன்ற பல்வேறு கொடுரமான சம்பவங்கள் குறித்து அறிந்து கொண்டோம்.

இதுவரை நாங்கள் நடத்திய விசாரணை மூலம், இந்த வன்முறையில் சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும், சம்பவப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய முடியாததால், பலி எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை.
இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மியான்மர் ராணுவத்தின் உயரதிகாரிகள் பொறுப்பாளிகள் ஆக்கப்பட வேண்டும்

அவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திலோ, அல்லது சிறப்பு தீர்ப்பாயத்திலோ இன அழிப்பு வழக்கு தொடரப்பட்டு, கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெளத்த மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில், லட்சக் கணக்கான ரோஹிங்கயா முஸ்லிம் இன மக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.வங்க மொழி பேசி வரும் அவர்கள், ராக்கைன் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வந்தாலும், அவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறிவர்களாகவே கருதப்பட்டு வருகின்றனர்.
கடந்த 1982-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.2014-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில்கூட ரோஹிங்கயா முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில், தங்களது உரிமைகளுக்காக ரோஹிங்கயா முஸ்லிம்களில் சிலர் மியான்மர் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர்.
மொழி மற்றும் மத உணர்வு காரணமாக, ரோஹிங்கயா விடுதலைப் படையினருக்கு வங்கதேசம் ஆதரவு அளித்து வருவதாக மியான்மர் அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில், 30-க்கும் மேற்பட்ட காவல் சாவடிகளில் ரோஹிங்கயா விடுதலைப் படையினர் கடந்த ஆண்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 71 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ரோஹிங்கயா விடுதலைப் படையினருக்கு எதிராக மட்டுமே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்தாலும், அது கனக் கச்சிதமான இன அழிப்பு’ நடவடிக்கை என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்தது.

அந்த நடவடிக்கைகளில் 400 பேர் உயிரிழந்ததாக மியான்மர் அரசு கூறியது. எனினும், இதில் 730 சிறுவர்கள் உள்பட 6,700 ரோஹிங்கயா இனத்தவர்கள் பலியானதாக எல்லைகள் அற்ற மருத்துவர்கள்’ அமைப்பு தெரிவித்தது. Myanmar Rohingya Genocide , Myanmar Rohingya Genocide News