கட்சித் தாவலுக்கு இடமில்லை – தொடர்ந்தும் மலையக மக்கள் முன்னணியில் நிலைப்பேன் – ராதாகிருஸ்ணன்

0
389
Radakrishnan firmly stated continue work Upcountry People Front

(Radakrishnan firmly stated continue work Upcountry People Front)

மலையக மக்கள் முன்னணியில் தொடர்ந்தும் தலைவராக செயல்பட்டு மலையக மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்றவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் உறுதியாக கூறியுள்ளார்.

அத்துடன் மலையக மக்கள் முன்னணியிலிருந்தோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்தோ விலக போவதில்லை எனவும், இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைய போவதில்லையெனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் நான் இ.தொ.காவுடன் இணைய போவதாகவும், மலையக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து விலக போவதாகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகியாகியிருந்தன.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவான பதிலை தெரிவிக்கும் வகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் ஹட்டனில் இன்று (26) மதியம் இடம்பெற்றது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் அனுஷியா சந்திரசேகரன், மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் விஜேந்திரன் உட்பட மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர், இலங்கை தொழிலாளர் காங்கிரசிலிருந்து எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இ.தொ.காவுடன் சேர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இது ஒரு சோடிக்கப்பட்ட கதை. இதை யார் சோடித்தார்கள் என்று எனக்கும் தெரியவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் ஹட்டனில் எனக்கு பாராட்டு விழா இடம்பெற்றது. இது ஒரு பொதுவான நிகழ்வு. இதில் இ.தொ.காவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதை வைத்துக்கொண்டு நான் இ.தொ.காவோடு இணைய போவதாக சிலர் கதைகட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பல ஊடகங்கள் இந்த விடயத்தின் உண்மை நிலைமையை புரிந்து கொள்ளாமல் திரித்து செய்திகளை வெளியிட்டு வந்துள்ளனர்.

நான் ஒரு போதும் மலையக மக்கள் முன்னணியில் இருந்து விலக போவதில்லை என்பதை உறுதிப்பட சொல்லுவதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுக்கின்றேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எனக்கும் உள்ள மூன்று வருட கால உறவில் எந்த ஒரு விரிசலும் இல்லை.

அதை போன்று மலையக மக்கள் முன்னணியில் உள்ள உறவிலும் எவ்வித மாற்றமும் இல்லை. எங்களது உறவு எதிர்காலத்திலும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் மீண்டும் அமைச்சரிடம் இ.தொ.காவோடு கூட்டணியாக சென்று இணைய போவதாக வெளியில் பேசிக் கொள்கின்றார்களே என கேட்ட பொழுது,

நான் இ.தொ.காவுக்கு போகவில்லை. கூட்டணியாகவும் செல்லவில்லை. திரும்ப திரும்ப இவ்விடயத்தை கேட்காதீர்கள். இன்றுடன் இவ் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதற்காகவே ஊடகங்களை அழைத்து கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு மற்றும் கவுன்சில் குழு 26.08.2018 அன்று காலை கூடியது. எந்தவிதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை.

மலையக மக்கள் முன்னணி ஒரு குடும்பம். குடும்பம் என்றால் சிற்சில பிரச்சினைகள் இருக்கும். அதை நாம் பேசி தீர்த்துக் கொள்வோம். வெளியார் தலையிட அவசியமும் இல்லை.

வெளியாருக்கு சொல்லவும் அவசியமும் இல்லை என தெரிவித்த அமைச்சர் எந்த கட்சியில் பிரச்சினை இல்லை என கேள்வியும் எழுப்பினார்.

மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது. இதில் ஜனநாயக முறையில் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க முடியும்.

எவர் வேண்டுமானாலும் தலைவராக வர முடியும் என தெரிவித்த அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் சந்திரசேகரனின் புதல்வி போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு சந்திரசேகரனின் அபிலாஷைகளை தொடர்ந்தும் பூர்த்தியிற்பதகாவும் அவரின் புதல்விக்கு தன்னுடைய பாராளுமன்ற செயலாளராக பதவி வழங்கியுள்ளதாகவும் இதன்போது கூறினார்.

இது இவ்வாறிருக்க ஊடகங்கள் இன்று சுதந்திரமாக கேள்விகளை கேட்கின்றீர்கள். இதற்கு முன் ஊடகங்களுக்கு ஒரு கட்சியின் பிரச்சினையை கேட்டறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருந்ததையும் ஞாபகப்படுத்திய அமைச்சர் 9 மாகாண சபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாகவும், எல்லை நிர்ணய பிரச்சினையில் சிறுபான்மை கட்சிகளுக்கு போதிய திருப்தி இல்லாமையால் பாராளுமன்றத்தில் இவ்விடயத்தை கொண்டு வந்தபோது ஒட்டு மொத்தமாக 139 பேர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

பெருந்தோட்ட பகுதிகளில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கட்டியமைத்து கொடுக்கப்படும் தனி வீடுகளில் மலையக மக்கள் முன்னணிக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

இது தொடர்பாக கொழும்பில் அமைச்சர் திகாம்பரத்துடன் கடந்த தினத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சுமூகமான ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Radakrishnan firmly stated continue work Upcountry People Front)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites