தமிழ் பேசும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே சமாதானம் ஏற்படும் – சி.வி.விக்கி வலியுறுத்தல்

0
408
europian union and north cm vickneshwaran meeting

(europian union and north cm vickneshwaran meeting)

தமிழ் மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முடியும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அவ்வாறான மாற்றங்கள் ஏற்படாத பட்சத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என ஐரோப்பிய குழுவினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் இன்று (20) வட மாகாண முதலமைச்சரை கைதடியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இலங்கையில் சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கான காரணிகளை ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் வருகை தந்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் கருத்துரைத்த முதலமைச்சர், தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த மக்கள் மத்தியில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தங்களின் ஆதிக்கத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்ற காரணத்தினால் எம்மால் எவற்றினையும் செய்ய முடியாத நிலைமை தோன்றியுள்ளது.

அவ்வாறான நிலைமையில் சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த முடியாது. சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த தமிழ் மக்கள் சம அந்தஸ்துடையவர்கள் என்ற நிலை ஏற்பட்டால் மாத்திரமே அனைத்தும் சாத்தியப்படும் என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறினேன்.

அவர்களும் அந்த கருத்தினை ஏற்றுக்கொண்டார்கள். யாழ். மாவட்டத்தில் தற்போது நடைபெறும் விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்கள். வட மாகாணத்தில் இராணுவம் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பது மற்றும் மகாவலி திட்டம் தொடர்பாகவும் மகாவலி தண்ணீர் தராமல் தடுப்பது தொடர்பாகவும் எடுத்துரைத்தேன்.

தெரியாத விடயங்கள் பல தெரிந்து கொண்டதாகவும் குழுவினர் தெரிவித்ததுடன், சந்தித்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், முன்னாள் போராளிகள் தொடர்பாகவும் கேட்டிருந்தார்கள். அதன்போது, முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் முகாம்களில் வைத்திருந்த போது, பலரை தம்வசம் ஆக்கியுள்ளார்கள்.

இராணுவத்தினர் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முன்னாள் போராளிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் போராளிகளின் வாழ்க்கை நிலை உயர்ந்தாலும், முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கியுள்ளதை சுட்டிக்காட்டினேன்.

அதேநேரம், சமூகத்தில் முன்னாள் போராளிகள் தொடர்பான கரிசனை இருக்கின்றது. முன்னாள் போராளிகளுடன் இணைந்திருப்பதை கிராம மக்கள் தவிர்ப்பதையும் எடுத்துக் கூறினேன்.

அவ்வாறு முன்னாள் போராளிகளை தனியாக இருக்க விட முடியாது. அரசாங்கமும், வடமாகாண சபையும் இணைந்து, முன்னாள் போராளிகளுக்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், அவ்வாறான செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றதாகவும் எடுத்துரைத்தாக முதலமைச்சர் மேலும் கூறினார்.

(europian union and north cm vickneshwaran meeting)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites