இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்

0
2859
jaffna sanguvelly dead baby came alive dog

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தையான டிவேனிகா சுதர்சன் உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் கடந்த யூன் மாதம்-09 ஆம் திகதி குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். உயிரிழந்த குழந்தை மூன்று நாட்கள் உயிருடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட சம்பவம் யாழ்.குடாநாடு மாத்திரமன்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் காட்டுத் தீ போலப் பரவியிருந்தது.(jaffna sanguvelly dead baby came alive dog,Tamilnews,Srilanka Tamilnews)

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகங்கள் மாத்திரமன்றிக் கொழும்பு ஊடகங்கள் பலவும் இதுதொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கித் தொடர் செய்திகளையும், சில ஊடகங்கள் கட்டுரைகளையும் வெளியிட்டிருந்தது. எமது செய்திச் சேவை குறித்த விடயம் தொடர்பில் தீவிர கவனஞ் செலுத்தித் தொடர் செய்திகளை காணொளி ஆதரங்களுடன் வெளியிட்டிருந்தமையும் பலரும் அறிந்ததே.

இந்த நிலையில் குறித்த குழந்தை தற்போது நாயின் உருவில் வந்துள்ளதாக வெளியான தகவல் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

குழந்தையின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட மானிப்பாய் பிப்பிலி மயானத்திலுள்ள நினைவிடத்தில் குழந்தையின் குடும்பத்தவர்கள் இணைந்து குறிப்பிட்ட தினங்கள் வரை பாலூற்றி வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை உயிரிழந்து எட்டாவது நாள் வழமை போன்று அதிகாலை வேளையில் நினைவிடத்தில் பாலூற்றுவதற்காக குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர் சென்றுள்ளனர்.

மயானத்திற்குச் சமீபமாக நீர் அள்ளுவதற்காக அவர்கள் முச்சக்கரவண்டியிலிருந்து கீழே இறங்கிய போது திடீரென அவ்விடத்திற்கு வந்த கறுப்பு நிற நாயொன்று அவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளதுடன் அவர்கள் முச்சக்கர வண்டியில் ஏறி அமர்ந்த போது இறந்த குழந்தையின் தாயின் மடியில் ஏறி அமர்ந்துள்ளது.

எனினும், முன்னர் அறிமுகமில்லாத காரணத்தால் நாயை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் செல்ல முயற்சித்த போதும் குழந்தையின் தாய், தந்தை மற்றும் பேர்த்தியாரின் மடியில் மாறி ஏறி அமர்ந்து அங்கிருந்து தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுமென்ற வகையில் நாயின் செயற்பாடுகள் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் குறித்த நாயைத் தம்முடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்கள். தற்போது குறித்த நாய் இரவு வேளைகளில் குழந்தையின் பெற்றோருக்கு அருகிலேயே உறங்குவதுடன் குழந்தை உயிருடனிருந்த போது செயற்பட்ட விதம் போன்றே அதனுடைய பல்வேறு செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தந்தை ஒரு முச்சக்கர வண்டிச் சாரதியாகவுள்ள நிலையில் அவர் தொழில் நிமிர்த்தமாக வெளியே செல்லும் போது குறித்த குழந்தை தானாக முச்சக்கர வண்டியில் ஏறி அமர்ந்து குறிப்பிட்ட தூரம் வரை செல்வதை உயிருடனிருக்கும் போது வழமையாகக் கொண்டிருந்தது. இதேபோன்று குறித்த நாயும் செயற்படுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக குடும்பத்தவர்கள் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள குழந்தையின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட மயானத்திற்குச் செல்லும் போது இந்த நாயும் முச்சக்கர வண்டியில் ஏறிச் செல்கிறது. அதுவும் உயிரிழந்த குழந்தையின் மடியிலும், பேர்த்தியாரின் மடியிலும் மாறி மாறி அமர்ந்து செல்கிறது. பின்னர் மயானத்திற்கு அருகிலிருந்து அவர்களுக்கு வழிகாட்டியாகச் செல்லும் குறித்த நாய் நினைவிடத்தைப் பல முறை சுற்றிச் சுற்றியும் வருகின்றது.

பேர்த்தியாரின் வேண்டுதல் பலித்ததா?

உயிரிழந்த பெண் குழந்தையின் உயிரிழப்பில் பல மர்மங்கள் நிலவி வரும் நிலையில் குறித்த குழந்தையை நாய் உருவிலேயாவது வரச் செய்யாயோ? எனத் தாம் இறைவனை வருந்தி மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டதாகவும், தமது வேண்டுதல் நிறைவேறியுள்ளதாகவும் குழந்தையின் பேர்த்தியார் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் குழந்தை உயிரிழந்து எட்டாவது நாள் அதிகாலை -05 மணியளவில் நினைவிடத்தில் பாலூற்றுவதற்காக முச்சக்கர வண்டியில் சென்றோம். அன்று மயானத்துக்குச் செல்லும் போதும் எங்கள் பிள்ளை நாய் வடிவிலேனும் எங்களுடன் வந்து பாசம் வைக்காதோ? என வருந்தி எண்ணிக் கொண்டே சென்றேன்.

மயானத்திற்கு அருகில் குழந்தையின் தந்தையார் முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கித் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட சமயம் அங்கு திடீரென வந்த நாயொன்று குழந்தையின் தந்தை, தாய் மற்றும் என்னைக் கொஞ்சியதுடன், தாயின் மடியில் ஏறியும் இயல்பாக இருந்துள்ளது.

குறித்த நாயை நாங்கள் பின்னர் விரட்ட முற்பட்ட போதும் அது எங்களை விட்டுச் செல்லவேயில்லை. முச்சக்கர வண்டிக்குள் ஏறி எங்களுடனேயே அமர்ந்து விட்டது.

தற்போது இந்த நாய் குழந்தையின் வீட்டிலேயே தொடர்ந்தும் நிற்கிறது. வீட்டின் அறைக்குள் குழந்தையின் தாய், தகப்பன் ஆகியோருக்கு அருகிலேயே குறித்த நாயும் இரவு நேரத்தில் உறங்குகிறது. நாங்கள் எங்கள் சென்றாலும் அதுவும் எங்கள் கூடவே வரும்.

குழந்தை உயிருடனிருக்கும் போது தினம் தோறும் அதிகாலை-05 மணியளவி சங்கானையிலிருந்து சென்று குழந்தையைக் கொஞ்சி, விளையாடி விட்டுத் தான் வேலைக்குச் செல்வேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாதா கோயிலுக்கு குழந்தையை அழைத்துச் செல்வேன்.

வேலை முடித்து வீட்டிற்கு வருகை தரும் போது தன்னைத் தூக்குமாறு கூறி அழுவா. அதேபோன்று தான் இந்த நாய் நான் வேலைக்குச் செல்லும் போதும், வேலையால் வந்த பின்னரும் என்னுடன் நெருங்கி வந்து விளையாடும். நான் வீடு செல்லும் ஒவ்வொரு தடவையும் நாய் மோட்டார்ச் சைக்கிளில் ஏறி அமர்ந்து விட்டுத் தான் செல்லும்.

நாங்கள் வளர்த்த நாய் கூட இது போன்று எங்களுடன் இதுவரை செயற்பட்டதில்லை. இந்த நாயின் செயற்பாடுகளைப் பார்த்த பலரும் குழந்தையின் உயிரிழப்பில் மர்மங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் எங்கள் குழந்தையின் நடவடிக்கைகள் போலவே இந்த நாயின் செயற்பாடுகளும் அமைந்துள்ளமையால் எங்கள் அம்மு எங்களை விட்டுப் போகவேயில்லை. அவள் மறுஜென்மம் எடுத்து வரப் போறாள்.விரைவில் வருவாள் எனவும் அவர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

அம்மு’ஆன நாய்

உயிரிழந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தையான டிவேனிகாவை ‘அம்மு’ எனச் செல்லப் பெயர் சூட்டியே குழந்தையின் பெற்றோர்களும், உறவினர்களும் அழைப்பார்கள். தற்போது குறித்த நாயையே அவர்கள் அனைவரும் ‘அம்மு’ எனச் செல்லப் பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.

‘அம்மு’ எனக் கூறி அழைத்ததால் போதும் நாய் எங்கிருந்தாலும் வந்துவிடும். உயிரிழந்த குழந்தை குறித்த பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்பதால் அவளுக்குச் செல்லம் அதிகம்.ஆனால், தற்போது குறித்த நாய் வீட்டிலுள்ள அனைவருக்கும் செல்லம்.

பெற்றோர்,உறவினர் மகிழ்ச்சி

நாய் உருவில் தமது குழந்தை மீண்டும் வந்துள்ளதாக குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தை உயிரிழந்த சம்பவத்திலிருந்து அவர்கள் மீண்டெழுந்துள்ளதுடன் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தமது குழந்தை மீண்டும் பிறப்பெடுத்து வருவாள் எனவும் அவர்கள் முழுமையான நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நாயின் செயற்பாடு குழந்தையின் உறவினர்கள் மட்டுமன்றி ஊரவர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நேரடி ரிப்போர்ட் மற்றும் காணொளிகள்:-
(செல்வநாயகம் ரவிசாந்,
ஊடகவியலாளர்-)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: jaffna sanguvelly dead baby came alive dog,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, Today Tamil News, Global Tamil News, Hot News, Srilanka news,