‘கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்’ – விக்கியை போட்டு தாக்கிய தவராசா

0
557
cv wigneswaran thavarasa

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் போன்று வாயால் வடை சுடுபவன் நானல்லன். வடக்கு மாகாண சபை நிர்வாகத்தை நடத்தத் தெரியாது இருந்துவிட்டு ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்பதைப் போன்று வடக்கு முதலமைச்சரின் கருத்து அமைந்துள்ளது என வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். (cv wigneswaran thavarasa,Tamilnews,Srilanka Tamilnews)

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் இரண்டு வாரங்களுக்குள் வடக்கு வன்முறைகளைக் கட்டுப்படுத்திக்காட்டுவேன் என்று கூறியிருந்தார். அதற்குப் பதில் வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம் என்பது போன்று முதலமைச்சரின் கருத்து இருப்பதாகச் சாடியிருந்தார்.

இதற்குப் பதிலடியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவரது கட்சி நீக்கியும் அவைத் தலைவரின் ஆசிர்வாதத்தினால் தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருப்பதாகத் தவராசாவைச் சாடியிருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அதிகாரங்களைப் பற்றித் தெரியாது எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சரின் கருத்துக்கு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தானே தயாரித்த கேள்வி, பதில் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: தங்கள் கட்சி தங்களை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியும் அவைத் தலைவரின் ஆசியினாலேயே தாங்கள் அந்தப் பதவியில் உள்ளீர்கள் எனவும், எமது (மாகாண சபையின்) அதிகாரங்களை மற்றவர்கள் மடக்கிப் பிடித்ததால்தான் நாங்கள் (மாகாண சபை) பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளாரே. அதுபற்றித் தங்கள் கருத்து என்ன?

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
பதில்: நான் இன்றோ நேற்றோ பதவிக்காக அரசியலுக்கு வந்தவனும் அல்ல. வாயால் வடை சுடுபவனும் அல்லன். ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பார்கள். இருக்கின்ற அதிகாரங்களை வினைத்திறனாகச் செயற்படுத்துவதற்கு ஆளுமையும், விவேகமும் தேவை.

மாகாண சபை கடந்த 5 ஆண்டுகளில் எங்களுக்கு இருக்கும் அதிகார வரம்புக்குள் வினைத்திறனாகச் செயற்பட்டு எத்தனையோ விடயங்களைச் செயற்படுத்தி இருக்கமுடியும். அந்த இயலாத் தன்மையை நிரூபிக்க என்னிடம் நிறைய ஆதாரங்கள் உண்டு. முதலமைச்சரைப் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு கோரியுள்ளேன், தற்போதும் கோரி வருகின்றேன். முதலமைச்சர் மாகாண சபையை வினைத்திறனாகச் செயற்படுத்தியுள்ளார் என்பதைப் பகிரங்க விவாதத்தில் நிரூபித்துக் காட்டட்டும். நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து அல்ல, அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகின்றேன்.

மாகாண சபையின் அசமந்தப் போக்கினால் நாம் இழந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களோ ஏராளம். அபிவிருத்தி என்பது ஏதோ கெஞ்சிப் பெறும் விடயமல்ல. அது எமது உரிமையின் ஓர் அம்சம்.

ஆரம்ப கர்த்தாக்களில் நானும் ஒருவன்
பதவி மோகத்தினால் நான் மாகாண சபையின் செயற்பாட்டின்மையினை விமர்சிக்கவில்லை. 45 வருடங்களிற்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் நானும் ஒருவன். பொன் சிவகுமாரன், லோறன்ஸ் திலகர், பொன் சத்தியசீலன் போன்றோருடன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலிருந்தே செயற்படுபவர்களில் நானும் ஒருவன். மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், குட்டிமணி, தங்கத்துரை, புஸ்பராஜா, வரதராஜப் பெருமாள், பாலகுமார் போன்றோருடன் சம காலத்தில் சிறையில் இருந்தவன்.

அண்மையிற்தான் அரசியலுக்கு வந்த முதலமைச்சருக்கு நான் இங்கு குறிப்பிடும் பெயர்களே சில வேளைகளில் தெரியாமலிருக்கலாம். எனது அரசியல் செயற்பாட்டினால் எனது சொந்த வாழ்வில் இழந்தவை ஏராளம். நான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதனால் எனது மேற்படிப்பிற்குக்கூட முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அரசமைப்பில் பங்களிப்பு
சந்திரிகா அம்மையாருடைய ஓகஸ்ட் 2000ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு வரைபு தொடர்பான அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுப் பங்களிப்புச் செய்தவர்களில் நானும் ஒருவன். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி மாநாட்டு (2006ஃ2007) தொடர் அமர்வுகளில்; வடக்கைச் சேர்ந்த தனி மனிதனாக நின்று தமிழர்களின் உரிமையை ஏற்கும் வண்ணம் அரசமைப்பு வரைபினை ஏற்படுத்தக்கூடிய வகையிலான அறிக்கையினைத் தயாரிப்பதில் பெரிய பங்களிப்பினை வழங்கியவன்.

தற்போதைய அரசமைப்பு வரைபுக்கான பொது மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினராக இருந்து அந்தக் குழுவின் அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களில் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யும் வகையில் அந்த அறிக்கையினைத் தயாரிப்பதில் முழுமையாகப் பங்களிப்புச் செய்தவன். அரசமைப்புச் சபையின் மத்தி – மாகாணங்களுக்கு இடையிலான உறவு தொடர்பான உபகுழுவின் நிபுணத்துவ உறுப்பினராக இருந்து அதன் அறிக்கை வரைபில் அதேபோல் பங்காற்றியுள்ளேன்.

எனது நிலைப்பாட்டிலேயே முதலமைச்சரும்

13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளினை முழுமையாக இனங்கண்டு அவற்றை நிவர்தி செய்யும் விதத்தில் அரசமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் அமையக்கூடிய வகையிலேயே எனது முன்மொழிவுகள் எப்போதும் அமைந்திருந்தன. எனது இந்த நிலைப்பாட்டினையே முதலமைச்சரும் கொண்டிருப்பதனால்தான் முதலமைச்சர் சார்பில், அன்றைய அமைச்சர் குருகுலராஜாவையும் இணைத்துச் சென்று, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் முன்னால் நான் பரிந்துரைகளை வழங்கியிருந்தேன்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன அல்லது அதனை முழுமையாகச் செயற்படுத்துவதில் தடைகள் உள்ளன என்பதற்காக அது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. 35 விடயங்கள் மாகாணத்திற்கான விடயப் பரப்பாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த விடயப் பரப்புகளினை முற்றாக மாகாண சபையினுடைய அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்களாகச் செயற்படுத்துவதற்கு ஏறத்தாழ 300 நியதிச் சட்டங்கள் வரை இயற்ற வேண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரை வடக்கு மாகாண சபையினால் பதின்நான்கு நியதிச்சட்டங்களே ஆக்கப்பட்டுள்ளன. நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு மாகாண சபையில் ஆளணிப் பற்றாக்குறை இருப்பதனால் துறைசார் நிபுணர்கள் ஊடாக அவற்றினைத் தயாரிப்பதற்கு வெளிநாட்டுத் தூதரகங்கள்கூட உதவ முன்வந்தன. அவற்றினைக்கூடப் பாவித்து மாகாண சபைக்கு நியதிச் சட்டங்களை ஆக்கத் தெரியவில்லை.

இவர்களது மந்தப் போக்கினைக் கண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும், நான் மீன்பிடி தொடர்பான நியதிச்சட்டத்தை இயற்றிக் கடந்த பெப்ரவரி மாதத்தில் கொடுத்திருந்தேன். இதுவரை அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது. மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட விடயப்பரப்புகளிற்கான நியதிச் சட்டங்களை ஆக்குவதன் மூலமே அவ்விடயப் பரப்புகளிற்கான மத்திய சட்டவாக்கங்களை வட மாகாணத்திற்குள் செயலிழக்கச் செய்ய முடியும்.

அதுவரை மாகாண விடயங்களில் மத்தியின் தலையீடு சட்ட ரீதியாகத் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இவ்வாறு மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாட்டின்மையினை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆடத் தெரியாதவர் மேடை கோணல், என்று கூறிக் கொண்டே இருப்பர் – என்றுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:cv wigneswaran thavarasa,cv wigneswaran thavarasa,