கருணாநிதி உடலில் நிகழ்ந்த அதிசயம்: மருத்துவர்களே ஆச்சர்யத்தில்…

0
685

திமுக தலைவர் கருணாநிதியின் இதயம் சில வினாடிகள் நின்று பின்னர் துடித்தது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி ஒரு பிறவி போராளி. சிறுவயதில் தன்னை பள்ளியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்காக பள்ளியின் எதிரே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று போராட்டம் நடத்தி பள்ளியில் சேர்க்கப்பட்டவர். அன்றுமுதல் அவர் ஒரு போராளியாகவே தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். போராட்ட குணம் கொண்ட கருணாநிதி தற்போது தனது உடல் உபாதைகளுடன் பெரும் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு வருகிறார். Karunanidhi Health Condition Tamil News

கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து காவிரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அட்மிட் செய்யப்பட்டார். திடீரென உடலில் ரத்த அழுத்தம் குறைந்தது காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் என்று அன்றையதினம் மருத்துவமனை வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அரை மணி நேரத்திற்குள்ளாகவே கருணாநிதியின் உடல்நிலை சீரானது. மருத்துவர்களின் சிறந்த மருத்துவ சிகிச்சையை தாண்டி கருணாநிதியின் தனிப்பட்ட உடல் வலிமையும் இதற்கு ஒரு காரணம். ஏனெனில் 95 வயதான ஒரு முதியவர் ரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்ட பிறகு அதிலிருந்து உடனடியாக மீண்டு வருவது என்பது சாதாரணமாக நடக்காத விஷயம். ஆனால் கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் நாளே அந்த சாதனையை நிகழ்த்தி விட்டார்.

இதே போலத்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றொரு அதிசயம் நடந்துள்ளது. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேற்று மதியம் காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து சென்றனர். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு என அனைத்துமே சரியாக இருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதியின் உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது.

கருணாநிதியின் ரத்த அழுத்தம் மளமளவென குறையத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது இதயத் துடிப்பின் வேகம் குறைந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை தொடங்கினர். குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் குவியத்தொடங்கினர். தகவல் கசிந்ததால், காவிரி மருத்துவமனையை சுற்றிலும் தொண்டர்கள் குவிந்தனர். இதனால் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை முழுக்க முக்கிய பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டனர். அப்போது மீண்டும் நடந்தது அந்த அதிசயம். கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் சீரடைந்தது. இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் அனைத்துமே சரியான அளவுக்கு மேம்பட்டது.

இதுகுறித்து இப்பொழுது மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதியின் இதயத்துடிப்பு சில வினாடிகள் நின்று போய் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது என்று கூறுகின்றன. இந்த தகவல் அறிந்து தான் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கூட கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபடி அற்புதங்களைச் செய்து வருகிறார் என்று தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கடந்த இரு நாட்களாக அளித்துவரும் பேட்டிகளை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் கருணாநிதி உடல் நிலையில் பெரும் அற்புதம் நிகழ்ந்தது என்பதை தான் அவர்கள் பல்வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டுச் சொல்லி வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதுதான் அந்த அற்புதம் என்கிறது மருத்துவமனை வட்டாரங்கள். “எழுந்து வா தலைவா”, “வாழ்க வாழ்க வாழ்கவே, டாக்டர் கலைஞர் வாழ்கவே” என்று மருத்துவமனைக்கு வெளியே நின்றபடி திமுக உடன்பிறப்புகள் எழுப்பும் கோஷமும், கருணாநிதியின் இயல்பிலேயே அமைந்துள்ள போராட்ட குணமும் அவரது ஒவ்வொரு உடலின் ஒவ்வொரு உறுப்பையும், மீட்டெடுத்து வருகிறது என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் திமுக பிரமுகர் ஒருவர்.