லிப்பக்கலை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தில் 37 பேர்; அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்

0
830
37 people danger landslides

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட மெராயா லிப்பக்கலை தோட்டத்தில் வசிக்கும் 7 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். (37 people danger landslides disaster risk)

குறித்த தோட்டத்தில் சுமார் 25 அடி உயரமான மண்மேடு ஒன்று சரிந்து விழும் அபாயத்தில் காணப்படுவதாகவும், குறித்த மண்மேட்டின் மேல் 1 வீடுகளும் மண் மேட்டுக்கு அடிவாரத்தில் 6 வீடுகளும் காணப்படுகிறது.

அத்தோடு, இந்த மண்மேட்டில் பல வெடிப்புகள் காணப்படுவதால் எந்த நேரத்திலும் குறித்த மண் மேடானது சரிந்து விழக்கூடும் என்ற அச்சத்தில் இங்குள்ள குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கும், லிப்பக்கலை தோட்ட நிர்வாகத்திற்கும் பல தடவைகள் அறிவித்துள்ள போதிலும், இதுவரை இந்தப் பிரச்சினை தொடர்பில் எந்தவித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அண்மைக்காலமாக இந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மழைபெய்து வந்ததன் காரணமாக இந்தப் பகுதியில் வாழும் மக்கள் தினமும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் நிலைமை தொடர்பில் லிப்பகலை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரும், கிராம உத்தியோகத்தரும் நேரில் விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ள போதிலும், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமை குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் அதுதொடர்பான அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்வதைவிட அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் காணப்படும் பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தாது அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருகின்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைமைகள் இதற்கு நடவடிக்கை எடுத்து மாற்று இடங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 37 people danger landslides disaster risk