பாஜக – அதிமுக கூட்டணி அம்பலம்: ஸ்டாலின் விமர்சனம்

0
358
ADMK backed BJP criticized DMK unforgivable betrayal TamilNadu

ADMK backed BJP criticized DMK unforgivable betrayal TamilNadu

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அதிமுக பாஜகவை ஆதரித்தது, தமிழ்நாட்டுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என, திமுக செயல் தலைவர் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வை வலுக்கட்டாயமாக அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவை அனுப்பிய நீட் மசோதோக்களுக்கும் குடியரசுத் தலைவர் அனுமதி பெறாமல் அலைக்கழித்து, தமிழில் நீட் தேர்வு எழுதிய ஒரே பாவத்துக்காக தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, அநீதி இழைத்துள்ளது மத்திய பாஜக அரசு.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தங்களின் அரசியல் காரணங்களுக்காக வரலாறு காணாத தாமதத்தை உருவாக்கியதும், 15-வது நிதி ஆணையத்தின் மூலம் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கீட்டையே அடியோடு குறைக்கும் முயற்சியில் இறங்கி, உயர் கல்வி ஆணையத்தை அமைத்து மாநில உரிமைகளைப் பறிக்க முற்படுவதோடு மட்டுமின்றி உயர் கல்வியில் சமூக நீதியைச் சீர்குலைக்கும் இழிவான முயற்சியிலும் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

அணை பாதுகாப்புச் சட்டம் என்று கூறி மாநிலத்தில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டைக் கூட எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் அதிகாரங்களை அப்படியே அபகரித்து சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. தமிழகத்துக்கு எந்தவொரு முக்கியத் திட்டங்களுக்கோ, நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கோ, அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கோ நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

வர்தா புயல், சென்னைப் பெருவெள்ளம், ஒக்கி புயல் என்று கேட்ட எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய திட்டங்கள் மற்றும் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது உள்ளிட்டவற்றில் 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதியை மத்திய அரசு இன்னும் கொடுக்கவில்லை.

ஆனாலும் தன் சம்பந்தியின் பார்ட்னர் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிக் கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, தன்னை எப்படியாவது ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றி விடுங்கள் என்று சுயநலத்தின் உச்சமாக விண்ணப்பம் வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசை எதிர்க்க முதுகெலும்பின்றி, வருமான வரித்துறை சோதனையில் மிரண்டு, நடுங்கி பாஜகவிடம் மண்டியிட்டு, ஆதரவு தெரிவித்துள்ள முதல்வரும், தமிழ்நாட்டின் சுயமரியாதையை டெல்லியிடம் மொத்தமாக அடகு வைத்திருக்கும் அதிமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களும் தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் தலைமையிலான அதிமுக முழுக்க முழுக்க பாஜகவின் பினாமி கம்பெனியாகச் செயல்படுகிறது என்பது தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்களுக்குள் அரசு ரீதியான உறவு மட்டுமே இருக்கிறது என்று இதுவரை பேசி வந்த அதிமுக- பாஜகவினரின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகிறது. கண்ணை மூடிக்கொண்டு மத்திய பாஜக அரசை ஆதரித்ததன் மூலம் பாஜக – அதிமுக இடையே உள்ள மர்மக்கூட்டணியும் அம்பலமாகி விட்டது.

2016 ஆம் ஆண்டு முதல் அதிமுக அமைச்சர்கள், அதிமுக அரசில் உள்ள தலைமைச் செயலாளர், துணைவேந்தர், மற்றும் அமைச்சர்களுக்கு வேண்டியவர்கள் மீது நடத்திய வருமான வரித்துறை சோதனைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திடீரென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு முதல்வருடைய சம்பந்தியின் பார்ட்னரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையை ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பாஜகவுக்கு நிறைவேறி விட்டது.

ஆகவே, அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போடுவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுத்த பிரத்யேக முயற்சி தான் இந்த வருமான வரித்துறை சோதனையே தவிர ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை அல்ல என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதுவரை தமிழ்நாட்டு நலன்களை வஞ்சிப்பதில் அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகளும் கைகோத்துச் செய்த துரோகம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக எதிர்த்து வாக்களித்திருப்பதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் ஊழல் என்று சென்னைக்கு வந்திருந்த பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித் ஷாவுடைய பேச்சின் கூச்சல் சப்தம் ஓய்வதற்குள் ஏற்பட்டுள்ள அதிமுக – பாஜக கூட்டணி விவரம் சனிக்கிழமை வெளியான ஆங்கில நாளிதழ் ஒன்றில் முன் கூட்டியே விரிவாக வெளியிடப்பட்டது. அந்த பேரம் உண்மை என்பது நாடாளுமன்றத்தில் அதிமுக மேற்கொண்டுள்ள பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் எதிரொலித்துள்ளது.

ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்து அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய பாஜக அரசையும், மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு, மத்திய பாஜக அரசை ஆதரித்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசையும் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.

ஊழல் அதிமுகவுடனோ வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவை ஒரு போதும் திமுக அனுமதிக்காது; எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADMK backed BJP criticized DMK unforgivable betrayal TamilNadu

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :