இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கிற்கு உதவிய பெண் மற்றும் மகன் மீது தாக்குதல்

0
590
son & woman helped court case attacked unknown people

(son & woman helped court case attacked unknown people)

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்ப பெண்ணும், அவரது ஆறு வயது மகன் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த குடும்ப பெண் நேற்றைய தினம் தனது ஆறு வயது மகனுடன் வட்டுக்கோட்டை – கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பும் போதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இனந்தெரியாத கும்பல் ஒன்று அவர்களை வழி மறித்து இரும்பு கம்பிகள் உள்ளிட்டவையால் தலையில் தாக்கி உள்ளனர்.

குறித்த தாக்குதலில் குடும்ப பெண் தலையில் படுகாயமடைந்து அந்த இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதேவேளை அவரது ஆறு வயது மகன் மீதும் தாக்குதல் மேற்கொண்டதில் மகனும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர்.

பின்னர் வீதியால் வந்தவர்கள் மயக்கமடைந்திருந்த குடும்ப பெண்ணையும் காயங்களுக்கு உள்ளான அவரது மகனையும் மீட்டு கோட்டைக்காடு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அது தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு உதவியாளராக குறித்த பெண் செயற்பட்டு வருகின்றார்.

அதேவேளை, குறித்த வழக்கு நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதனை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதி வழக்குரைஞர் நாயகம் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

அதற்கு மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடந்த காலத்தில் அச்சுறுத்தல் இருந்தமையால் மனுதாரர்கள் மனுதாக்கல் செய்யவில்லை எனவும் தற்போது காலம் மாறியுள்ளதால் மனு தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்திருந்தனர்.

அத்துடன் கடந்த தவணையின் போது மனுதாரர்களை அச்சுறுத்தும் வகையில் நீதிமன்ற வளாகத்தினுள் அதிகளவான புலனாய்வாளர்கள் நடமாடினார்கள் என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதற்கு பிரதி வழக்குரைஞர், அவர்கள் தனக்கு பாதுகாப்பு வழங்க வந்தவர்கள் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து நீதிபதி குறிப்பிடுகையில், பாதுகாப்பு வழங்க எனில் அதில் மன்று தலையிட முடியாது.

ஆனால் மனுதாரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலில் ஈடுபட்டால், அது பற்றி எதிர் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலையே குறித்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் உதவியாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கு.குருபரன், கி.சுபாஜினி மற்றும் வி.திருக்குமரன் ஆகியோர் முன்னிலையாகி வருகின்றனர்.

(son & woman helped court case attacked unknown people)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites