புதிய அரசியல் யாப்பு மக்கள் தமது சொந்த விடயங்களை தாமே நிர்ணயித்து முடிவெடுக்கும் வகையில் அமைய வேண்டும் – சம்பந்தன்

0
445
Indian Foreign Secretary Vijay Gokhale met R Sampanthan Colombo

(Indian Foreign Secretary Vijay Gokhale met R Sampanthan Colombo)

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகெல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன் புதிய அரசியல் யாப்பானது மாகாண சபை தேர்தல்களுக்கு முன்பதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.

அதேவேளை, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளமையினால் இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவது மிக அவசியமானதாகும் என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தினை உதாசீனம் செய்ய முடியாது என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் பிரிக்கபடாத, ஒன்றிணைந்த பிரிக்க முடியாத இலங்கைக்குள்ளேயே நாம் தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் நீண்டகால தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினுடாகவே ஒரு தீர்வினை காண முடியும் என்பதனையும் வலியுறுத்தினார்.

புதிய அரசியல் யாப்பானது மக்கள் தமது நாளாந்த விடயங்கள் குறித்து தாமே நிர்ணயித்து முடிவெடுக்கும் வகையில் அமைவதன் அவசியத்தினையும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்கள் புதிய அரசியல் யாப்பில் இடம்பெறவேண்டியதன் அவசியத்தினையும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், இலங்கையில் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை இந்தியா ஊக்குவிக்க வேண்டும் என வெளியுறவு செயலரை கேட்டுக்கொண்டார்.

வெளிநாட்டு முதலீடுகள் எமது மக்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் என்பதனையும் விசேடமாக இளைஞர்கள் மத்தியில் பாரிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து மீள வரும் அகதிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இந்திய வெளியுறவு செயலாளர் இந்திய அரசாங்கமானது இந்த அகதிகள் தொடர்பில் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இந்திய வெளியுறவு செயலரோடு இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங்க்கும் இந்திய தூதரகத்தின் பிரதானிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

(Indian Foreign Secretary Vijay Gokhale met R Sampanthan Colombo)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites