​வளர்ந்து வரும் “கட்சி மற்றும் தோழர்களை” குறிவைக்கிறாரா ராகுல்காந்தி?

0
599
Rahul ganthi targets growing

நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து பாரதிய ஜனதா – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வியூகம் அமைத்து களப்பணிகளை தொடங்கியுள்ளன.rahul ganthi targets growing party comrades?

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்து அரசியல் அரங்கை உசுப்பிவிட்ட நிலையில், தற்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி – இயக்குநர் ரஞ்சித்தின் சந்திப்பு மீண்டும் தமிழக அரசியலில் விவாதமாகியுள்ளது.

இந்த சந்திப்பின் மூலம் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் சூழலில், ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை மாறத் தொடங்கியுள்ளதா என்ற விவாதமும் உடன் எழுந்திருக்கிறது.

எளிய மக்களின் குரல்களை காங்கிரஸ் கருத்தில் கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் தீவிரமாக எழத் தொடங்கிய காலக்கட்டத்தில், கர்நாடக சட்டப்பேரவையில் மக்கள் ஆசி பயணம் என்ற பெயரில் 30 மாவட்டங்களில் ராகுல் காந்தி தீவிரமாக பிரச்சாரம் செய்ததற்கு, அங்கு மக்களின் ஆதரவு கிடைத்தது.

அத்துடன், பாஜகவின் இந்துத்துவ நிலைப்பாட்டை தகர்ப்பதற்காக, லிங்காயத்துக்களின் வாக்குகளைபெற பசவண்ணரின் வசனங்களை பிரச்சாரங்களில் பேசி அந்த அமைப்பின் ஆதரவுகளைப் பெற தனது வியூகத்தை மாற்றியதையும் பார்க்க முடிந்தது.

இந்துத்துவ கருத்தியலில் மென்மையான போக்கைக் கடைபிடிக்கும் காங்கிரஸ் கட்சி, ராகுலின் கைக்கு வந்த பிறகு, கர்நாடகாவில் உள்ள மடங்கள், கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்தியதையும் தவிர்த்துவிட்டு செல்லமுடியாது.

இந்த அணுகுமுறை கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கவில்லை என்ற போதிலும், தற்போது, மற்றொரு அணுகு முறையை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. அதுதான், வளர்ந்து வரும் தலைவர்களை நண்பனாக்கிக் கொள்வது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ந்து வரும் தலைவர்கள், அமைப்புகளை நெருங்கி தனது நண்பனாக்கிக் கொள்ள காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

பட்டேல் இன மக்களின் இடஒதுக்கீடு பற்றி பேசி, அந்த இனமக்களின் தலைவராக உருவெடுத்த 24 வயது இளைஞர் ஹர்திக் மீதான நம்பிக்கை அதிகரித்தது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி, ஹர்திக் பட்டேலையும் தனது நண்பனாக்கிக் கொண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில் குதித்தது.

இதே போல், உனாவில், மாட்டின் தோலை வைத்திருந்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து உனா வரை ஜிக்னேஷ் மேவானி நடத்திய பேரணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது.

இதனை அறிந்த ராகுல்காந்தி, ஜிக்னேஷ் மேவானியுடன் கைகோந்து மோடியின் கோட்டையான வட்காம் கோட்டையைக் கைப்பற்றினார். தமிழகத்திலும் இந்த சூத்திரத்தை பரிசோதித்துப் பார்க்க ராகுல் காந்தி முயற்சிக்கிறாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

குறிப்பாக, தலித் அரசியல் மூலம் தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்தி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து தனது தோழமை உணர்வை அவர் வெளிப்படையாகவே காட்டியுள்ளார்.

அத்துடன், மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து, தனது அரசியல் புன் சிரிப்பின் மூலம் தனது ப்ரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி, பொதுவெளியிலும் தீவிர தலித் அரசியலை பேசும் இயக்குநர் பா.ரஞ்சித்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்ததன் மூலம் வளர்ந்து வரும் ஆளுமைகளை நிரந்தர நண்பர்களாக்கிக் கொள்ள காங்கிரஸ் முயற்சி செய்கிறதா என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

அரசியல் வெற்றிக்காக, லிங்காயத் வியூகத்தை கையில் எடுத்த ராகுல் காந்திக்கு அந்த முயற்சி கைகொடுக்கவில்லை.

இருப்பினும், அரசியலில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, வளர்ந்து வரும் ஆளுமைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து வெற்றி வியூகத்தைத் தீட்டும் ராகுலின் முயற்சி காங்கிரசுக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :