புதிய தேர்தல் முறையை நிராகரிக்கின்றோம் : ரிஷாட் பதியூதின் பாராளுமன்றில் அறிவிப்பு

0
359
tamilnews Ceylon Peoples Congress reject new electoral system

(tamilnews Ceylon Peoples Congress reject new electoral system)

எல்லை மீள்நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் அமைந்த புதிய தேர்தல் முறையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முற்றாக நிராகரிப்பதாகவும் பழைய தேர்தல் முறையின் படி மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் அறிவித்தார்.

தேர்தல்களைப் பிற்போட்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்காது மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளித்து அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய நல்லாட்சித் தலைவர்கள் வழி வகுக்க வேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மாகாண சபை எல்லை மீள்நிர்ணய அறிக்கை தொடர்பான இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

பழைய தேர்தல் முறையை மாற்ற வேண்டுமென்று எந்தவோர் எண்ணமும் அப்போது அரசிற்கு இருக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் வேறொரு விடயத்தை உட்புகுத்த சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்த போது, இந்தத் தேர்தலை பிற்போட வேண்டுமென்று எண்ணி ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தவர்கள், அவசர அவசரமாக புதிய தேர்தல் முறை மாற்றத்தை அதற்குள் கொண்டு வந்து வாக்கெடுப்புக்கு விட நடவடிக்கை எடுத்தனர்.

அந்தவேளை, ஆட்சியின் பங்காளிக்கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமரிடம் சென்று இது தொடர்பில் எமது தெளிவான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது.

கடந்த காலங்களில் நமது தலைவர்கள் தான் இந்த நாட்டை சீர்குழைத்தனர்.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட முஸ்லிம் தலைவர்களும் அதன் பின்னரான முஸ்லிம் தலைவர்களும் தாய் நாட்டிற்கு எப்போதும் விசுவாசமாக இருந்ததோடு இந்த நாடு பிளவுபடுவதை என்றுமே அனுமதித்தவர்களும் அல்லர், துணை போனவர்களும் அல்லர்.

அது மாத்திரமின்றி இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நாட்டைச் சின்னாபின்னப்படுத்தவோ நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லவோ நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவோ எந்தவோர் கட்டத்திலும் எமது தலைவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இடங்கொடுக்காதவர்கள் என்று நாம் கூறி எமது வேதனையைக் வெளிப்படுத்தினோம் எமது சமூகத்திற்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை அவரிடம் எடுத்துரைத்தோம்.

எனினும், நாங்கள் இந்தச் சட்டமூலத்திற்கு வாக்களிக்கும் நிலைக்கு அப்போது நிர்ப்பந்திக்கப்பட்டோம். இருந்த போதும் அந்த வேளையில் சகோதரர் முஜீபுர் ரஹ்மான் உட்பட நாங்கள் அனைவரும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் சட்ட மூலத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தோம்.

எங்களது கருத்துக்கள் உள்வாங்கப்படாது கொண்டுவரப்பட்ட இந்த சட்ட மூலத்தில் எமது சமூகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் 50:50 என்ற விகிதாசாரத்தைக் கோரி நின்றோம்.

அதுமாத்திரமின்றி மீண்டும் 2/3 பெரும்பான்மையுடன் தான் இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு முழுமையடைய வேண்டுமென்றும் வலியுறுத்தி உடன்பட வைத்தோம்.

இந்தச் சட்ட மூலத்தை எப்படியாவது பிற்போட வேண்டுமென்று நாங்கள் முயற்சியெடுத்த போதும் காட்டிக் கொடுப்புக்களால் அது முடியாமல் போகவே அதற்கு ஆதரவளித்தோம்.

இலங்கையின் வரலாற்றிலே இரண்டு பெரும்பான்மையினக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஆட்சி செய்வது இதுவே முதற்தடவை.

கடந்த காலங்களில் இவ்விரண்டு கட்சிகளின் முன்னைய தலைவர்கள் தமது அரசியல் இருப்புக்காகவும் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும் எதிர் நிலைப்பாடுகளையே எடுத்தனர்.

அத்துடன் இனவாதங்களையும் மதவாதங்களையும் தூண்டி நச்சு விதைகளை விதைத்து மக்களை பிரித்தாண்டனர்.

அது மாத்திரமன்றி தமிழ் தலைமைகளும் சில தவறுகளை விட்டிருக்கின்றது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தைக் கூட அப்போது தமிழ் தலைவர்கள் ஏற்க மறுத்தமை வரலாறு.

ஆனால், தற்போது வடக்கும் கிழக்கும் பிரிந்து அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட போது கிழக்கு மாகாண முஸ்லிம்களிடமோ, அவர்களின் பிரதிநிதிகளிடமோ கேட்கப்படாமலேயே அது நடந்து முடிந்தது.

அந்த நடைமுறையை அன்று தொடக்கம் இன்று வரையிலான முஸ்லிம் தலைவர்கள் எதிர்த்தே வந்தனர். எங்களைப் பொறுத்தவரையில் மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ பிரிந்து வாழ விரும்பாத போதும் நாட்டுத் தலைவர்கள் விட்ட தவறினால் நாங்களும் சமூக ரீதியாக சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இருக்கும் 52 அமைச்சுக்களில் எந்தவொன்றிலும் முஸ்லிம் செயலாளர்கள் கிடையாது. 32 வருடங்களுக்குப் பிறகு முஸ்லிம் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்காக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கும் நன்றி பகிர்கின்றோம். எமது சமூக விகிதாசார அடிப்படையில் குறைந்தது 3 பேராவது அரச அதிபராக இருக்க வேண்டும்.

எமது சமூகத்தைச் சார்ந்த 35 பேர் சுப்ரா தரத்தில் இருக்கின்றனர். அப்படியிருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.

புதிய தேர்தல் முறையில் மலையகச் சமூகம் முற்றாகப் பாதிக்கப்படுகிறது. அதே போன்று முஸ்லிம் சமூகமும் பாரிய பாதிப்புக்குள்ளாகின்றது.

தற்போது எமது சமூகத்தில் மாகாண சபை அங்கத்தவர்களாக இருக்கும் 43 பேர், புதிய எல்லை மீள்நிர்ணயம் மூலம் 13 ஆக குறைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியோரைப் பெறுவதென்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தவலிங்கம் தலைமையிலான எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் மூன்று முறைகள் கூறப்பட்டுள்ளன. எல்லா முறைகளுமே சிறுபான்மை சமூகத்திற்கு ஆபத்தாகவே முடிந்திருக்கின்றது.

ஏதோ இலங்கையில் எந்தத் தேர்தல் முறையும் இல்லாதது போல அவசர அவசரமாக இந்தத் தேர்தல் முறையைக் கொண்டு வந்ததன் நோக்கம் தான் என்ன? உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற படிப்பினைகள் நமக்குப் போதாதா?

புதிய தேர்தல் முறையின் மூலம் தான் இந்தத் தேர்தலைக் கொண்டுவர வேண்டுமென்று அரசாங்கமும், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரும் ஏன் அடம்பிடிக்கின்றனர்?

கடந்த யுத்தத்திலே, முஸ்லிம் சமூகம் ஈடுபாடு காட்டாத போதும் பாதிப்பிலும் அழிவிலும், பொருளாதார நஷ்டத்திலும், இழப்பிலும் நாங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

கடந்த ஆட்சியில் எமது சமூகத்தின் மீது நடாத்தப்பட்ட அட்டூழியங்களை தாங்க முடியாமலேயே நல்லாட்சியைக் கொண்டு வந்தோம். சட்டத்தை மதகுருமார்கள் கையிலெடுத்து ஆடத்தொடங்கியதை கண்டும் காணாதது போல அந்த அரசு இருந்ததால் தான் புதிய ஆட்சியைக் கொண்டுவந்தோம்.

இந்த விடயத்தில் சிறுபான்மைச் சமூகம் அனைத்தும் ஒன்றுபட்டது. என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.

(tamilnews Ceylon Peoples Congress reject new electoral system)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites