விஜயகலாவால் 5 சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன

0
539
Vijayakala Maheswaran mano ganesan

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புலிக் கருத்து தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் விஜயகலாவின் கருத்தால் ஐந்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவை பின்வருமாறு,

(1) ஒரு எம்பியும், ராஜாங்க அமைச்சருமான விஜயகலா பொறுப்பில்லாத முறையில் பேசி, அதன்மூலம் தன்னையும், தான் சார்ந்த மக்களையும் சட்ட மற்றும் அரசியல் சிக்கல்களில் மாட்டி வைத்து, தனது கட்சியையும் தர்ம சங்கடத்தில் சிக்க வைத்துள்ளார்.

(2) பல சவால்களுக்கு மத்தியில் அமைதி, இன சமத்துவம், சகவாழ்வு என்று செயற்பட்டு, ஞானசாரர் போன்ற பேரினவாத கும்பலுக்கு கடந்த ஆட்சியில் கிடைத்த, அரச ஆசீர்வாதம் இந்த ஆட்சியில் கிடைக்காமல் செய்ய உள்ளிருந்து போராடும் எம்மை போன்றவர்களையும் பலவீனப்படுத்தி விட்டார்.

(3) விஜயகலா சிறுபிள்ளைத்தனமாக அழைப்பு விடுவதினாலேயே, வடக்கில்-கிழக்கில் ஆயுத கிளர்ச்சி மீண்டும் உருவாக போவதில்லை என்ற நாம் எவ்வளவு சிங்கள மொழியில் எடுத்து கூறினாலும், “மீண்டும் புலிகள்” என்ற கருத்து அரங்கேறும் சூழலை ஏற்படுத்தி விட்டார். (அவரது சிறுபிள்ளைத்தனம், இந்த அரசுக்கு உள்ளே சிறுபிள்ளை அரசியல் செய்யும் இன்னொரு நபரான ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலிலேயே தெரிகிறது)

(4) “நியூயார்க் டைம்ஸ்” சிக்கலில் மாட்டியிருந்த ராஜபக்ச அணிக்கு மூச்சு விட நேரம் தந்ததுடன், நேரடியாக தமிழ், முஸ்லிம் எதிர்ப்பு இனவாதம் பேசும் பொதுபல சேனை, ராவணபல சேனை, டான் பிரசாத் போன்ற சில்லறைகளை மீண்டும் அரங்குக்கு கொண்டு வந்து விட்டார்.

(5) வடக்கின் உண்மை சமூக சவால்களான வாள்வீச்சு கலாச்சாரம், பாலியல் வல்லுறவு, கொள்ளை, கொலை, போதை வியாபாரம் மற்றும் பாவனை உள்ளடங்கிய சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பிரச்சினையை பின்னணிக்கு தள்ளி விட்டார்.

 நடந்தது நடந்து விட்டது. இனி என்ன செய்வது?

(1) விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் அவரது கட்சி உரிய முடிவுகளை எடுக்கட்டும். யூஎன்பியின் சேத சமாளிப்பு ((DAMAGE CONROL) நடைபெறுகிறது. அவரை அவர்களிடம் விட்டு விடுவோம்.

(2) இந்த பிரச்சினையை பயன்படுத்தி முன்னணிக்கு வர முயலும் பேரினவாத கும்பலுக்கு எதிராக தமிழ்-முஸ்லிம் மற்றும் முற்போக்கு சிங்கள சக்திகள் ஒன்று பட வேண்டும்.

(3) வடக்கின் உண்மையான சமூக சவால்களான வாள்வீச்சு கலாச்சாரம், பாலியல் வல்லுறவு, கொள்ளை, கொலை, போதை வியாபாரம் மற்றும் பாவனை உள்ளடங்கிய சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பிரச்சினையை தேசிய அரங்குக்கு கொண்டு வர தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதல்வர் விக்கினேஸ்வரன் அணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அனைத்து சக்திகளும் கூட்டாக செயற்பட வேண்டும். இதற்கு வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளையும் தர நாம் தயார்.

Update 01

 

ஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்?; மனோ கணேசன் கேள்வி!

“சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பில் பேசியது சட்டவிரோதம் என்றால், அன்று ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே.” என்று தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர்.

பிரபாகரன் கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தார். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரே இந்த கருத்தினை பகிரங்கமாக ஊடகங்களின் முன்னால் வந்து என்னிடம் நேரடியாக சொன்னார்.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் சீர்குலைந்துள்ள சட்டம், ஒழுங்கு நிலைமையை கண்டித்து ஒரு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தன் கோபத்தை வெளிப்படுத்திய விஜயகலா மகேஸ்வரனை மாத்திரம் விமர்சிப்பது ஏன்? புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதால், அதைப்பற்றி விஜயகலா பேசுவது சட்டவிரோதம் என கூறலாம். அப்படியானால், அன்று ஞானசாரர் கூறியதும் சட்ட விரோதம் அல்லவா?

விஜயகலா மகேஸ்வரன் தன் கருத்தை சொல்வதற்கு சரியான சொற்களை பயன்படுத்த தவறியிருக்கலாம். ஒரு இராஜாங்க அமைச்சராக அவரது கருத்தில் உரிய முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது கோபம் மிகவும் நேர்மையானது.

அத்துடன், இன்று யாழில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள், போதை வஸ்து கலாசாரம் தலை விரித்து ஆடுகிறது. சினிமா பாணி வாள்வீச்சு நடக்கிறது. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க பொலிஸார் தவறி விட்டனர்.” என்றுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Vijayakala Maheswaran mano ganesan,Vijayakala Maheswaran mano ganesan,Vijayakala Maheswaran mano ganesan