மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா

0
967
Vijayakala Maheswaran shocked information

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தால் தனக்கு 100 கோடி ரூபா வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியதாக இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். (Vijayakala Maheswaran shocked information)

வடக்கு கிழக்கில் விடுதலை புலிகள் அமைப்பு மீள உருவாக வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அவரிடம் தொலைபேசி மூலம் இன்றைய தினம் தொடர்பு கொண்டு வினவிய போதே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் 1 மில்லியன் வாக்குகளால் வெற்றி பெறுவோம். உங்களுக்கு அமைச்சுப் பதவியும் 100 கோடி ரூபா தருவோம். வடக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தருமாறு மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு கொடுக்காமல் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தும், வடக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நாளுக்கு நாள் வடக்கில் பாலியல் துஷ்பிரயோகங்களும் குற்றச்செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும், தெற்கில் இருந்தே வடக்கிற்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கிய போதிலும், அதிகளவிலான இராணுவத்தினர் வடக்கில் இருந்தும், இவ்வாறான குற்றச் செயல்களை அரசாங்கத்தால் ஏன் தடுக்க முடியவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று கூறவில்லை. விடுதலைப் புலிகள் காலத்தில் அவ்வாறான குற்றச்செயல்கள் வடக்கில் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டவே விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீங்கள் விடுதலைப் புலிகளை இல்லாமல் ஆக்கிய போதிலும், ஏன் வடக்கில் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் அவர் கேள்வியெழப்பியுள்ளார்.

அத்துடன், வடக்கில் போதைவஸ்து பாவனைக்கு அரசியல் வாதிகளின் வாகனங்களை பயன்படுத்தி கடத்தப்படுவதாகவும் இதற்கு பொலிஸாரும் அரசியல் வாதிகளும் உடந்தையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க மற்றும் துறைமுகம் போன்றவற்றில் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்யும் பொலிஸார், ஏன் வடக்கில் போதைப் பொருள் கடத்துபவர்களை கைதுசெய்ய முடியவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தான் இனவாதத்தை தூண்டும் வகையில் இவ்வாறு கருத்து தெரிவிக்கவில்லை என்றும் வடக்கு மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனவாத்தைத் தூண்டி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே ஒருசில அரசியல் வாதிகள் தெற்கில் முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வடக்கு மக்கள் அடிமட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். இதனை தெற்கு அரசியல்வாதிகள் இங்கு வந்து நேரில் பார்த்துவிட்டு, தெற்கு ஊடகங்களுக்கு வடக்கு மக்களின் அவலங்களை எடுத்துக்கூறுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Vijayakala Maheswaran shocked information