தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – நல்லாட்சி மீது விரக்தியுடன் மாவை

0
435
good governance government not fulfilled promise Tamil people

(good governance government not fulfilled promise Tamil people)

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட இன்றளவும் நிறைவேற்றவில்லை. போரினால் இழந்தவற்றை மக்களுக்கு மீள பெற்றுக் கொடுக்கவே நாம் நல்லாட்சி அரசுடன் இணைந்து வேலை செய்தோம்.

ஆனால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது என்று தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மக்கள் சேவை திட்டத்தின் 8 வது தேசிய நிகழ்ச்சி திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய செயற்பாடுகள் எமக்கு பலத்த ஏமாற்றத்தை தருகிறது.

ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து பணியாற்றுவதற்காகவே எமது மக்கள் வாக்களித்தார்கள்.

ஆனால் இன்று அது நடக்கவில்லை. எமது மக்கள் 30 வருடங்கள் போரினால் உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் பல இழப்புக்களை சந்தித்தார்கள்.

அவற்றை மீளவும் கட்டியெழுப்புவதற்காகவே அரசாங்கத்துடன் வேலை செய்தோம். ஆனால் எமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கின்றது.

தேர்தல் நிறைவடைந்த பின்னர் வடமாகாணத்தின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 2016 ஆம் ஆண்டு 14 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருந்தது.

தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வட மாகாணத்தின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருந்தது.

2018 ஆம் ஆண்டு 5 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியை கூட அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவில்லை.

இதற்கு காரணம் என்ன என கேட்கவேண்டிய காலத்தில் நாங்கள் இருக்கிறோம்.

சாதாரண மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் உள்ள நிலையில் 100 பிரச்சினைகளையாவது பூரணமாக தீர்க்கவேண்டும்.

இவ்வாறு கடந்த 3 வருடங்களில் செய்திருக்க வேண்டிய ஒன்றை கூட அரசாங்கம் இன்றளவும் செய்யவில்லை. நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. அழிந்த தேசம் கட்டியெழுப்பபடவில்லை.

சென்ற வருடம் வரவு செலவு திட்டத்தில் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர், நிதி அமைச்சருடன் பேசி வட கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் பிரத்தியேமாக 16 திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அது வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டு அவற்றுக்கான நிதியும் கூட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒன்றும் நடக்கவில்லை. எமது மக்களுக்கு நிலம் இல்லை. வீடுகள் இல்லை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லை.

90 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம் இல்லை.

இதற்காக வரவு செலவு திட்டத்தில் 2250 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனையாவது இந்த வருடத்திற்குள் செலவிடுங்கள்.

மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து சிற்றூழியர்களை கொண்டுவராமல் எமது பிரதேசங்களில் இருந்தே சிற்றூழியர்களை நியமியுங்கள் என உள்ளுநாட்டலுவல்கள் அமைச்சிடம் நேரடியாக கேட்டிருந்தோம்.

அதற்கு உடனடியாக பதில் கூறுங்கள். மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் நீண்டகாலம் தமிழ் மக்களுக்காக செயற்பட்டு வருவதுடன், நீண்டகாலமாக மக்களுடைய ஆணையையும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் எங்களை இணைக்காமல் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமியர் ஒருவரை இணைத்துக் கொள்வது எமக்கு பிரச்சினை அல்ல.

ஆனால், ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினரை இணைத்துக் கொள்ள முடிந்தால் எதற்காக எங்களை இணைத்துக் கொள்ள இயலாது? அந்த செயலணியில் தனியாக கூட்டம் நடத்துகிறீர்கள், தனியாக பேசுகிறீர்கள், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றாக இணைத்து செயற்பட வேண்டும்.

மேலும் யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீர்குலைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் வாள்வெட்டுக்களும், கொள்ளைகளும், பாலியல் பலாத்காரங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு யாருடையது? இதனை விட நுண்கடன் நிறுவனங்கள் தினசரி எமது மக்களை அச்சுறுத்துவதும், தாக்குவதுமாக உள்ளன.

சில தினங்களுக்கு முன்னரும் கர்ப்பிணி பெண் ஒருவரை நுண்கடன் நிறுவன ஊழியர்கள்தாக்கியுள்ளார்கள்.

இது தொடர்பாக பிரதமருடன் பேசியபோது அந்த கடன்களை இரத்து செய்யவேண்டும் என கேட்டிருக்கின்றோம் அதனையாவது அரசு செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

(good governance government not fulfilled promise Tamil people)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :