மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி

0
1336
Chulipuram Rejina student killed politicians dont care act

(Chulipuram Rejina student killed politicians dont care act)

சுழிபுரம் – காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் றெஜினா படுகொலை செய்யப்பட்டு நான்கு நாட்களாகின்றன.

ஆனால், இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களோ மாகாண சபை உறுப்பினர்களோ அந்த இடத்திற்குச் செல்லவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, அரச அதிகாரிகளும் இந்த விடயம் தொடர்பாக கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அயலூரைச் சேர்ந்தவர். சிறுவர்களின் நலனில், அவர்களின் சுக, துக்கங்களில் அக்கறை எடுப்பதற்கான அமைச்சர். சுழிபுரத்திற்கு அயல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வடக்கில் பெண்கள், சிறுவர்களுக்கான நலன்களில் அக்கறை செலுத்த வேண்டியவர். கொல்லப்பட்ட சிறுமியில் வீட்டிற்கு சில கிலோமீற்றர் தூரத்தில் வசிப்பவர்.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன். வடக்கின் கல்விப் புலத்தில் பொறுப்புமிக்க அமைச்சர். மாணவர்கள் மீது அக்கறை செலுத்துபவரும் இவரேதான்.

இவர்களை விட, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என ‘தமிழ் மக்களின் அக்கறை உள்ளவர்கள் போலத் தங்களைக் காட்டிக்கொள்ளும்’ பலர் உள்ளனர்.

இவர்களில் எவருமே இதுவரை மாணவி றெஜினாவின் கொலை தொடர்பாக அக்கறை எடுக்கவில்லை. வீட்டிற்குக் கூட வந்து பார்க்கவில்லை. ஏன், ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை.

இவர்களுக்கு அப்பால், அரச அதிகாரிகளும் அமைதியாகவே உள்ளனர். வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளரோ சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரோ இதுவரை சிறுமியின் வீட்டிற்குச் செல்லவில்லை.

வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர், சங்கானைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர், அயல் பாடசாலை அதிபர்கள் எவருமே அந்தச் சிறுமியின் துயரம் நிறைந்த மரண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

வித்தியாவும் இப்படித்தானே படுகொலை செய்யப்பட்டார், அதே ஊரைச் சேர்ந்தவர்களால் தானே அவளும் இவளும் சிதைக்கப்பட்டனர்.

உங்கள் பார்வையில் இவள் பின்தங்கிய பிரதேச மாணவி என்பதாலா? நகர்ப்புற மாணவி இப்படிக் கொல்லப்பட்டால் இப்போது கண்டன அறிக்கைகள் பத்திரிகைப் பக்கங்களை நிறைத்திருக்கும்… கடைகள் மூடப்பட்டிருக்கும்.. ஹர்த்தால் நடந்திருக்கும்… ரயர்கள் எரிந்திருக்கும்… இது பின்தங்கிய கிராமம் ஆகிவிட்டதே…

எடுத்ததுக்கு எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல்வாதிகளே நீங்கள் எங்கு சென்றீர்கள்…?

கிராமங்களை வலுவூட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரச அதிகாரிகளே நீங்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்?

அரசியல்வாதிகளே.. வாக்குக் கேட்க மட்டும் இந்தக் கிராமங்களை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. வாக்கைக் காப்பாற்ற உங்களால் முடியவில்லையே…!

மக்களுக்கான பிரதிநிதிகள் என்றும், மக்களுக்கான சேவையாளர்கள் என்றும் தம்மைக் கூறிக் கொள்ள அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என பிரதேச மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

(Chulipuram Rejina student killed politicians dont care act)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites