ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஆக்கிரமிப்பாளர் – வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின்

0
205
Northern Alliance member Ayoob Azim claimed President Sirisena

(Northern Alliance member Ayoob Azim claimed President Sirisena)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு ஆக்கிரமிப்பாளர் என கூறியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின், அவருடைய ஆட்சி காலத்திலேயே பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.

வடமாகாணசபையின் 125 வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்கள த்தினால் மேற்கொள்ளப்படும் அபகரிப்புக்கள் குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டுவந்த பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

இதன்போதே அயூப் அஸ்மின்,மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு மௌனமான ஆக்கிரமிப்பாளராக இருந்து கொண்டிருக்கின்றார்.

2015 ம் ஆண்டுக்கு பின்னரான அவருடைய ஆட்சிக்காலத்தில் வடமாகாணத்தில் பெருமளவு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் வரையிலான காணிகளை மாவில்ல பேணற் காடுகளாக அறிவித்து ஆக்கிரமித்தார்.

அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக பெருமளவு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு வடமாகாணத்தின் பல இடங்களில் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் ஆக்கிரமிப்புக்கள் நடந்திருக்கின்றன.

வடகிழக்கு மக்கள் ஜனநாயகத்திற்காகவும், ஊழல் அற்ற ஆட்சிக்காகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளித்து அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள்.

ஆனால் இன்று அவர் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் ஒருவராகவும், ஊழல்வாதிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் ஒருவராகவும் மாறியிருக்கும் நிலையில் ஜனாதிபதியிடம் நீதியை எதிர்பார்ப்பது எப்படி?

இராணுவம் மக்களுடைய நிலங்களை விடுவிப்பதாக கொழும்பில் மாத்திரம் கூறப்படுகிறது.

ஆனால் விடுவிக்கப்படும் நிலங்கள் மக்களுடைய தனிப்பட்ட நிலங்களே தவிர மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அரச நிலங்கள் அல்ல.

இராணுவம் இன்றளவும் அரச நிலங்களில் நிலை கொண்டுள்ளது.

மேலதிகமாக அரச நிலங்களை தேடிக் கொண்டிருக்கின்றது. அண்மையில் தொல்லியல் திணைக்களத்தை சேர்ந்த சிலரை சந்தித்த போது இராணுவம் யாழ்ப்பாண கோட்டையை தமக்கு தரும்படி கேட்பதாக
அவர்கள் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதியிடம் காணிகளை இழந்த மக்கள் நீதி கேட்பதால் பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. எனவே இந்த காணி ஆக்கிரமிப்புக்களை சர்வதேசத்திற்கு கொண்டு சென்று ஒரு வழிப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

(Northern Alliance member Ayoob Azim claimed President Sirisena)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites