ஆயுதப் படையினர் வடக்கு மக்களின் காணிகளில் பயிற்செய்கை; இரா. சம்பந்தன்

0
364
TNA meeting Norwegian State Secretary

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜென் ப்ரோலிச் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவிற்கும் இடையில் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. (TNA meeting Norwegian State Secretary)

நாட்டில் நிலவும் தற்கால அரசியல் நிலை குறித்து செயலாளரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் விசேடமாக இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவது தொடர்பில் நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் மக்கள் பிரதிநிதிகளாக எம் முன்னே எழுந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உதாசீனம் செய்ய முடியாது என தெரிவித்த அதேவேளை,

இந்த முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில் அது மேலும் மாக்களிடையே பிரிவினையை உருவாக்கும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் புதிய அரசியல் யாப்பு நிறைவேறுவதற்கான சாத்தியப்பாடுகளை இல்லை என்பதனை ஏற்க முடியாது என தெரிவித்த இரா.சம்பந்தன்,

கடந்த காலங்களில் இதனை முன்னெடுத்து செல்வதில் ஏற்பட்ட தாமதங்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும் வலியுறுத்தினார்.

உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்ய தவறியவற்றினை இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியும் என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தமது விருப்பத்திற்கும் சம்மதத்திற்கும் எதிராக ஆளப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

1956 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாட்டின் அரசாங்க கட்டமைப்பில் மாற்றத்தை வேண்டி, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வந்துள்ளமையை எடுத்துக்கூறிய இரா.சம்பந்தன்,
இந்த ஜனநாயக கோரிக்கையானது தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு மறுக்கப்பட்டுள்ளதனையும் தெளிவுபடுத்தினார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான எமது கோரிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் அமைவாகவே இருப்பதனை எடுத்துரைத்த இரா சம்பந்தன்,

புதிய அரசியல் யாப்பு தொடர்பான கருமங்கள் 1988 ஆம் ஆண்டில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையையும், ஒவ்வொரு அரசாங்கமும் இதுதொடர்பில் கருமங்களை முன்னெடுத்துள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் தேவையற்ற தாமதங்களை இனிமேலும் ஏற்க முடியாது என தெரிவித்த இரா. சம்பந்தன், வரைபு யாப்பு நாடாளுமன்றிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெருன்பான்மையினால் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதுவொரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

துவேஷ சிந்தையுடன் செயற்படுவோர் இந்த நாட்டில் பெரும் எண்ணிக்கையில் இல்லை என தெரிவித்த இரா. சம்பந்தன், துரதிஷ்டவசமாக மென்போக்காளர்களை விட அவர்களின் கருத்துக்கள் முதன்மை பெறுவதாகவும் கூறினார்.

ஆனால் மென்போக்காளர்கள் ஒன்று சேர்த்து இயங்குகின்ற பட்சத்தில் புதிய அரசியல் அமைப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுவதினை உறுதி செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

இராஜாங்க செயலாளரின் கேள்வியொன்றிக்கு பதிலளித்த இரா. சம்பந்தன், பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சமவுரிமை வழங்கப்டுவதில்லை இதனால் எம்மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

மாறாக அதிகாரம் சரியாக பகிரப்படுமிடத்து இந்த பொருளாதார சமூக பிரச்சினைகளை மிக பயனுள்ள, நேர்த்தியான வகையில் நிவர்த்தி செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கிலுள்ள காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட்டாலும் யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ளமையை கருத்திற்கொள்ளுகின்றபோது இந்த கருமங்கள் இன்னும் துரிதமாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

ஆயுதப் படையினர் இந்த நிலங்களில் பயிர்ச்செய்கை செய்து விளைச்சலை இந்த காணியின் உரிமையாளர்களுக்கே விற்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையை எடுத்துரைத்த அதேவேளை,
நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கி செல்வதற்கு இப்படியான நடவடிக்கைகள் தடையாக அமைவதையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எடுத்துக்கூறினார்.

மேலும், வடக்கு கிழக்கிலுள்ள பல பிரதேசங்களில் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன்,

எமது மக்களின் இந்த பிரச்சினைகளுக்கான சரியான தீர்வினை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் காத்திரமான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இலங்கை தொடர்பில் நோர்வே அரசாங்கம் எடுத்துவந்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் தொடர்ந்தும் அவர்களது ஆக்கபூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளும் இலங்கைக்கான நோர்வே தூதுவரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

tags :- TNA meeting Norwegian State Secretary

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites