ஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்

0
925
Saudi Joint Chiefs Operations seize main airport Yemen Tamil news

Saudi Joint Chiefs Operations seize main airport Yemen Tamil news

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது, சவுதி தலைமையிலான படைகள் ஹொடைடா நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டுள்ளன. இதேபோல், ஹொடைடா நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் செங்கடல் பகுதியில் இந்த படைகளின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஈரானில் இருந்து ஆயுதங்களை ஹவுத்திப் போராளிகள் கடல்வழியாக கடத்தி வருவதற்கு ஹொடைடா துறைமுகம் முக்கிய பகுதியாக விளங்குவதால் இதை கைப்பற்றியே தீர வேண்டும் என ஏமன் அரசு கருதுகிறது.

இதற்கிடையில், ஏமன் நாட்டில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஹொடைடா நகரின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நாட்டின் தலைநகர் சனாவை ஹொடைடா துறைமுகத்துடன் இணைக்கும் முக்கிய சாலையை துண்டித்துள்ளன.

மூன்றாண்டு கால உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஹொடைடா விமான நிலையத்துக்கு சில மீட்டர் தூரத்தில் அல் மன்ஸர் பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆவேசமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

அநேகமாக, இன்னும் சில மணி நேரத்துக்குள் ஹொடைடா விமான நிலையத்தை அரசுப் படைகள் கைப்பற்றி விடலாம் என ஏமனில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Saudi Joint Chiefs Operations seize main airport Yemen Tamil news